ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று மாலை ராஜஸ்தான் மாநிலத்திற்குள் நுழைகிறது
- மத்திய பிரதேச மாநிலத்தில் 88வது நாளாக பாதயாத்திரை நடைபெறுகிறது.
- மத்திய பிரதேசத்தில் மட்டும் 380 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை நடைபெற்றுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 7ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை பயணம், கடந்த மாதம் 23ந் தேதி மகாராஷ்டிராவிலிருந்து மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்திற்குள் நுழைந்தது. 88வது நாளாக இன்று காலை மத்திய பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் நகுல் நாத், முன்னாள் மத்திய மந்திரி அருண் யாதவ், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரியவ்ரத் சிங் ஆகியோரும் இந்த அணிவகுப்பில் ராகுல் காந்தியுடன் நடந்து சென்றனர். மத்திய பிரதேச மாநிலத்தில் புர்ஹான்பூர், கந்த்வா, கர்கோன், இந்தூர் மற்றும் உஜ்ஜைனி மாவட்டங்களை கடந்து மொத்தம் 380 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை நடைபெற்றுள்ளது. இந்த பாத யாத்திரையின்போது உஜ்ஜயினியில் உள்ள 12 ஜோதி லிங்கங்களில் ஒன்றான மகா காளேஸ்வரர் கோயிலுக்கு சென்ற ராகுல்காந்தி வழிபாடு நடத்தினார்.
இந்நிலையில் இன்று மாலை ராஜஸ்தான் மாநிலத்திற்குள் ராகுலின் யாத்திரை நுழைகிறது. அங்குள்ள சான்வ்லி கிராமத்தில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் உறுப்பினர்கள், ராஜஸ்தானை சேர்ந்த கட்சி உறுப்பினர்களிடம் தேசியக் கொடியை ஒப்படைக்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அம்மாநில காங்கிரசார் திட்டமிட்டுள்ளனர்.