பண மோசடியில் ஈடுபட்ட மொபைல் கேம் ஆப் நிறுவனம்- ரூ.7 கோடி பறிமுதல் செய்தது மத்திய அமலாக்கத்துறை
- கொல்கத்தா காவல்துறை பணமோசடி வழக்கு பதிவு செய்திருந்தது.
- மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து செயல்படும் மொபைல் கேம் ஆப் நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நிறுவனம் மற்றும் அதன் ஆப்ரேட்டர்களுக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை பணமோசடி வழக்கு தாக்கல் செய்தது. கொல்கத்தா நீதிமன்றத்தில் பெடரல் வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், மொபைல் கேம் ஆப் நிறுவன உரிமையாளர் நிசார் அகமது கானுக்கு சொந்தமான இடங்களில் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனையை நடைபெற்ற இடங்களில் மத்திய காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சோதனையின்போது ரூ.2000, ரூ.500 ரூ.200 மதிப்புள்ள நோட்டுக் கட்டுகள் படுக்கை அறை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கட்டுக்கட்டாக இருந்த அந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
பணத்தை எண்ணும் இயந்திரங்கள் உதவியுடன் அவற்றை எண்ணும் பணி நடைபெற்றது. இதுவரை 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த செயலி மற்றும் அதன் ஆபரேட்டர்கள் சீன கட்டுப்பாட்டில் உள்ள செயலி நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளனரா என்பது குறித்தும் விசாரித்து வருவதாக அமலாக்கத்துறை தகவல்கள் கூறியுள்ளன.