தடையை மீறிய சுற்றுலா பயணிகளுக்கு நூதன தண்டனை விதித்த போலீசார்
- இந்த நூதன தண்டனையால் நொந்து போன சுற்றுலா பயணிகள் போலீசாரிடம் தொடர்ந்து கெஞ்சினர்.
- போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் அருகே முடிகரே பகுதியில் உள்ள சார்மதி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அப்பகுதியில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரிப்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
இதுதொடர்பாக அருவியை சுற்றி பல இடங்களில் எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் சிலர் போலீசாரின் எச்சரிக்கையை மீறி அந்த அருவிக்கு சென்று குளித்துள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அருவியில் சில வாலிபர்கள் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தனர். அவர்களின் ஆடைகள் அருவிக்கரையில் இருந்தது. உடனே போலீசார் அந்த உடைகளை எடுத்துக்கொண்டு சென்றனர். இதைப்பார்த்த வாலிபர்கள் அருவியில் இருந்து ஓடி வந்து போலீசாரிடம் தங்கள் ஆடைகளை கேட்டு கெஞ்சினர். ஆனால் அவற்றை உடனடியாக போலீசார் கொடுக்கவில்லை. இந்த நூதன தண்டனையால் நொந்து போன சுற்றுலா பயணிகள் போலீசாரிடம் தொடர்ந்து கெஞ்சினர்.
இதையடுத்து போலீசார் சுற்றுலா பயணிகளை எச்சரித்து போதிய அறிவுரைகள் வழங்கி, ஆடைகளை கொடுத்து அனுப்பினர். இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பயனர்கள் பலரும் போலீசாரின் நடவடிக்கையை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.