உ.பி.யில் இரண்டு வாக்குச்சாவடிகளில் 100 சதவீதம் வாக்குப்பதிவு
- ஒரு பூத்தில் 375 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
- மற்றொரு பூத்தில் 441 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று ஐந்தாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆறு மாநிலங்களில் 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 63.57 சதவீத வாக்குகள் பதிவானது.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மக்களவை தொகுதியில் உள்ள லலித்பூர் மாவட்டத்தில் இரண்டு வாக்குச்சாவடிகளில் 100 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
மெராயுனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சவுல்டாவில் உள்ள 277-வது பூத்தில் 100 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த பூத்திற்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலில் 375 வாக்காளர்கள் பெயர் இடம் பிடித்திருந்தது. இதில் 198 ஆண் வாக்காளர்கள் ஆவார்கள். 177 பெண் வாக்காளர்கள் ஆவார்கள். இவர்களை அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
அதேபோல் நகால் கிராமம் பாம்ஹோராவில் உள்ள 355-வது பூத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இங்கு மொத்தம் ஆண் வாக்காளர்கள் 235 பேர், பெண் வாக்காளர்கள் 206 பேர் என 441 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் புத்னி நராஹட் கிராமத்தில் உள்ள ஒரு பூத்தில் 100 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிகிறது. ஆனால் தொழில்நுட்பம் காரணமாக இருக்கலாம் என குழப்பம் நீடித்து வருகிறது.
100 சதவீதம் வாக்குகள் பதிவாக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு கிராமத்தச் சேர்ந்த பல இளைஞர்கள் வெளியூரில் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் சொந்த ஊர் திரும்பி தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.