இந்தியா

யுஜிசி நெட் தேர்வுக்கான புதிய தேதி அறிவிப்பு

Published On 2024-08-02 10:20 GMT   |   Update On 2024-08-02 10:20 GMT
  • தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்படும்.
  • நெட் தேர்வை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டது.

நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்படும்.

அதன்படி, இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு நாடு முழுவதும் 317 நகரங்களில் 1,205 மையங்களில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுத மொத்தம் 11,21,225 பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 9,08,580 பேர் தேர்வை எழுதினார்கள்.

தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தி தேர்வு முடிவுகளை துரிதமாக வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டு இருந்த நிலையில், தேர்வை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில், யுஜிசி நெட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதுள்ளது.

அதன்படி, வரும் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை UGC NET தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேர்வு காலை 9 மணி முதல் 12 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் 2 பிரிவுகளாக தேர்வு நடைபெறவுள்ளது.

வினாத்தாள் கசிவு புகாரைத் தொடர்ந்து, கடந்த மாதம் நடந்த UGC NET தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், புதிய தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News