சட்டத்தில் இடமில்லை... உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு
- உக்ரைன் - ரஷியா போர் காரணமாக சுமார் 20,000 மாணவர்கள் இந்தியா திரும்பினர்
- உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் இருந்து உக்ரைன் சென்று மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவ, மாணவிகள் உக்ரைன் - ரஷியா போர் காரணமாக தாயகம் திரும்பிவிட்டனர். உக்ரைன் - ரஷியா போர் காரணமாக தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள சுமார் 20,000 மாணவர்கள் இந்தியா திரும்பி இருந்தார்கள். அவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது, அவர்கள் தங்கள் கல்வியை இங்கேயே தொடர வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு பல தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுதொடர்பான சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பை தொடர வழிவகை செய்வதற்கு, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை முதன்மை மருத்துவ பல்கலைக்கழகங்களில் சேர்க்க முடியாது. அதிகப்படியான கட்டணத்தை உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களால் செலுத்தவும் முடியாது. அவர்களை இங்குள்ள பல்கலைக்கழங்களில் அனுமதித்தால் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.