ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கை 168 சதவீதம் குறைந்துள்ளது - மத்திய மந்திரி தகவல்
- கடந்த 2014-ம் ஆண்டு முதல் கலவரத்தின் மூலமாக நிகழும் வன்முறைகள் 80 சதவீதம் குறைந்துள்ளது.
- ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கை 168 சதவீதம் குறைந்துள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரி அனுராக் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான ஜீரோ சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட தீவிரமான நடவடிக்கைகள் உறுதியான பலனைத் தந்துள்ளன.
உரி தாக்குதலுக்கு எதிராக 2016-ம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. 2019-ம் ஆண்டு நிகழ்ந்த புல்வாமா குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் கலவரத்தின் மூலமாக நிகழும் வன்முறைகள் 80 சதவீதம் குறைந்துள்ளது. பொதுமக்களின் இறப்பு விகிதம் 89 சதவீதமாக குறைந்துள்ளது, 6,000 போராளிகள் சரணடைந்துள்ளனர்.
பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கை 168 சதவீதம் குறைந்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் குற்றம் 94 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை இடதுசாரி தீவிரவாத நடவடிக்கைகள் இருமடங்கு, அதாவது 265 சதவீதம் குறைந்துள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ் வடகிழக்கு மாநிலங்களில் அமைதிக்கான புதிய சகாப்தம் தொங்கியுள்ளது என தெரிவித்தார்.