கவலையை கட்டுப்படுத்த முடியல.. செய்தியாளர்கள் முன் கண்கலங்கிய உ.பி. அமைச்சர்
- பேக்கரியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது.
- சிறுமி கர்ப்பமடைந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 12 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் மொயீத் கான் மற்றும் அவரது ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மொயீத் கானுக்கு பத்ராசாவில் உள்ள சொந்தமான பேக்கரியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது. பேக்கரியில் வைத்து 12 வயது சிறுமியை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மொயீத் கானும், அங்கு ஊழியராக பணியாற்றி வரும் ராஜூ கான் என்பவரும் சேர்ந்து பலாத்காரம் செய்து, அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
பின்னர், சிறுமி கர்ப்பமடைந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார். பேக்கரி சட்டவிரோதமாக இயங்கி வந்தது தெரியவந்ததை அடுத்து, உணவு பாதுகாப்புத் துறையால் பேக்கரிக்கு சீல் வைக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகம் புல்டோர் மூலம் பேக்கரியை இடித்தது.
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தை சந்தித்த அமைச்சரும், நிஷாத் கட்சி தலைவருமான சஞ்சய் நிஷாத், செய்தியாளர்கள் முன் மனம் உடைந்து அழுதார். அப்போது அவர் கூறுகையில், சமாஜ்வாடி கட்சி மொயீத் கானை கட்சியில் இருந்து நீக்கவோ அல்லது குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக எதுவும் கூறுவோ இல்லை. குற்றவாளியைப் பாதுகாக்கிறது என்று கூறினார்.