என்னை தகுதிநீக்கம் செய்யும் அதிகாரம் யுபிஎஸ்சிக்கு கிடையாது: பூஜா கேத்கர் பதிலடி
- தன்னை கைது செய்யாமல் இருக்க இடைக்கால ஜாமின் வழங்கக் கோரி பூஜா மனுதாக்கல் செய்தார்.
- என்னை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை யுபிஎஸ்சிக்கு கிடையாது என வாதிட்டார்.
புதுடெல்லி:
புனேவைச் சேர்ந்த பூஜா கெத்கர், பயிற்சி பெற்று வரும்போதே ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான அனைத்து வசதிகளையும் கேட்டதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து ஐஏஎஸ் தேர்வுக்கு ஓபிசி மற்றும் உடல் ஊனம் வசதி பெற்றது என அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் கூறப்பட்டன. விசாரணை முடிவில் யுபிஎஸ்சி பூஜா கெத்கரின் ஐஏஎஸ்-ஐ ரத்து செய்தது. மேலும் தேர்வு எழுத தடைவிதித்தது.
இதற்கிடையே இந்த புகார் வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் மறுத்த மாவட்ட நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு எதிரான யுபிஎஸ்சியின் குற்றச்சாட்டுகளுக்கு டெல்லி ஐகோர்ட்டில் பூஜா கேத்கர் பதில் தாக்கல் செய்தார். அந்த பதிலில், என்னை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை யுபிஎஸ்சிக்கு கிடையாது என வாதிட்டார்.
இதுதொடர்பாக சி.எஸ்.இ. 2022 விதிகளின் விதி 19ன்படி 1954-ம் ஆண்டு அகில இந்திய சேவைகள் சட்டம் மற்றும் தகுதிகாண் விதிகளின் கீழ் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.