ஞானவாபி மசூதியில் தொல்லியல்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக ஆய்வு
- அலகாபாத் உயர்நீதிமன்றம் ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த அனுமதி
- நேற்று ஐந்து மணி நேரம் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்
ஞானவாபி மசூதியில் அறிவியல்பூர்வமாக ஆய்வு மேற்கொள்ள, அலகாபாத் உயர்நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. அதனைத்தொடர்ந்து ஐந்து மணி நேரம் ஆய்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக ஆய்வு செய்ய தொல்லியல்துறை அதிகாரிகள் ஞானவாபி மசூதிக்கு காலை 8 மணி மணியளவில் வந்தனர். அவர்கள் 9 மணிக்கு ஆய்வை தொடங்கினர். மதியம் வரை தொடர்ந்து ஆய்வு நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்த மனுதாரர்களின் வழக்கறிஞர் கூறும்போது ''தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துவதற்கான ஞானவாபி மசூதிக்கு வந்துள்ளனர். 9 மணிக்கு ஆய்வு தொடங்கும். இது 2-வது நாள் ஆய்வு. இந்த ஆய்வு முடியும் வரை மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
நாங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம். அதிகாரிகள் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி வந்துள்ளனர். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம். விரைவில இந்த விவகாரத்தை தீர்க்க விரும்புகிறோம். எல்லாவற்றையும் இந்த ஆய்வு தெளிவுப்படுத்தும்'' என்றார்.
உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றம் நேற்று ஆய்வுக்கு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்ய மசூதிக்கு சென்றனர். அப்போது மசூதி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் நேற்று ஐந்து மணி நேரம் ஆய்வு நடத்தப்பட்டது.