"எந்த தகவலும் மறைத்து வைக்கப்படவில்லை" என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய எஸ்பிஐ-க்கு நீதிமன்றம் உத்தரவு
- நிறுவனங்கள் கொடுத்த நன்கொடை, கட்சிகள் பெற்ற தொகை ஆகியவை வெளியிடப்பட்டது.
- எந்த தகவலும் மறைத்து வைக்கப்படவில்லை என்ற உறுதி நாங்கள் அறிய விரும்புகிறோம்- கோர்ட்
தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தரவுகளையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் நன்கொடை கொடுக்கப்பட்ட நிறுவனங்கள், கட்சிகள் பெற்ற தொகை உள்ளிட்ட தகவல்களை மட்டும் முதலில் கொடுத்தது. நாங்கள் கொடுக்க சொன்னது அனைத்து தரவுகளையும் என உச்சநீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியது. அப்போது பத்திரத்தின் சிறப்பு எண் (unique bond numbers), கொடுத்தவர் பெயர், அவர் எந்த கட்சிக்கு கொடுத்துள்ளார் என உள்ளிட்ட தகவல்களை கொடுக்கவும் வலியுறுத்தியது.
இந்த நிலையில் தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பத்திரத்தின் சிறப்பு எண் உள்ளிட்ட எந்த தகவலும் மறைத்து வைக்கப்படவில்லை என்ற உறுதியை நாங்கள் பெற விரும்புகிறோம்.
தனிப்பட்ட நன்கொடையாளர்கள், நிறுவனம் ஆகியவை மூலம் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டது தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும். இது தொடர்பாக வருகிற 21-ந்தேதிக்குள் (வியாழக்கிழமை) பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும். இன்றும் ஒரு உத்தரவுக்காக காத்திருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் எஸ்பிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்தல் பத்திரத்திலும் ஒரு சிறப்பு வாய்ந்த எண் இருப்பதாகவும், இந்த எண் மூலமாக எந்த கட்சிக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது என்பதை எளிதாக கண்டுபிடித்து விடலாம் எனவும் மனுதாரர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
தேர்தல் பத்திரத்தின் சிறப்பு நம்பரை வைத்து நன்கொடையாளர்கள் யாருக்கு பணம் வழங்கினார்கள் என்ற தகவலை முழுமையாக சேகரித்து அதை சரிபார்ப்பதற்காக எஸ்பிஐ ஜூன் மாதம் வரை அவகாசம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.