இந்தியா

வயநாடு நிலச்சரிவு - சுருதி

தாய், தந்தை, தங்கம், பணம்.. நிலச்சரிவில் எல்லாம் போச்சு.. பரிதவிக்கும் மணப்பெண்

Published On 2024-08-02 01:59 GMT   |   Update On 2024-08-02 01:59 GMT
  • மேப்பாடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சிவண்ணன், சபிதா, ஸ்ரேயா ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.
  • மரம் விழுந்ததில் ஜிகிஷ், சுஜிதா, சூரஜ் ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

வயநாடு:

வயநாடு நிலச்சரிவு ஏராளமானோரின் உயிரை பலிவாங்கியதோடு மட்டுமல்லாமல், பலரது வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதில் மணப்பெண்ணின் சோகம் சொல்லி மாளாது. அது பற்றிய விவரம் வருமாறு:-

மேப்பாடியை சேர்ந்தவர் சிவண்ணன். இவருடைய மனைவி சபிதா. இவர்களுக்கு சுருதி, ஸ்ரேயா என 2 மகள்கள். சுருதி கோழிக்கோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருகிறார். ஸ்ரேயா கட்டப்பனாவில் உள்ள அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். மேப்பாடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சிவண்ணன், சபிதா, ஸ்ரேயா ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். சுருதி தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்ததால் உயிர் தப்பினார். இதனால் அவர் குடும்பத்தை இழந்து தவித்து வருகிறார்.

இதுகுறித்து சுருதி கண்ணீர் மல்க கூறும்போது, எனக்கு டிசம்பரில் திருமணம் நடத்த பெற்றோர் திட்டமிட்டு இருந்தனர். இதற்காக ரூ.4½ லட்சம், 15 பவுன் நகைகளை பெற்றோர் சேமித்து வைத்திருந்தனர். இவை அனைத்தும் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கடந்த 6 வாரங்களுக்கு முன்பு நாங்கள் புதிய வீட்டில் குடியேறினோம். நிலச்சரிவால் அந்த வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளது. பெற்றோர், தங்கை இறந்து விட்டதால் எனது வாழ்க்கையே இருண்டு விட்டது என்றார்.

மற்றொரு சம்பவம்...

இதேபோல் சூரல்மலையை சேர்ந்தவர் சுஜாதா. இவருடைய மகன் ஜிகிஷ். மருமகள் சுஜிதா. பேரன் சூரஜ், பேத்தி மிருதுளா. இவர்கள் 5 பேரும் வீட்டுக்குள் இருந்தபோது, 30-ம் தேதி அதிகாலை வீட்டு முன்பு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நிலைமையை உணர்ந்த ஜிகிஷ் தனது குடும்பத்தினரை ஒவ்வொருவராக வீட்டில் இருந்து கயிறு கட்டி வெள்ளத்தை கடந்து சென்றார்.

அப்போது மரம் விழுந்ததில் ஜிகிஷ், சுஜிதா, சூரஜ் ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இருப்பினும், ஜிகிஷ் மன உறுதியுடன் தனது குடும்பத்தினரை டார்ச் லைட் வெளிச்சத்தில் மேடான பகுதிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.

அவர்கள் சென்ற வழியில், எதிரே சற்று தூரத்தில் காட்டு யானைகள் நின்று கொண்டு இருந்தன. இதை பார்த்த ஜிகிஷ் தனது குடும்பத்தினரை அமைதியாக இருக்கும்படி கூறினார். ஒரு புறம் யானைக்கூட்டம், மறுபுறம் காட்டாற்று வெள்ளம். எங்கு சென்றாலும் ஆபத்து காத்திருந்த சூழ்நிலையில், அவர்கள் 5 பேரும் மெதுவாக நகர்ந்து சென்று அங்குள்ள காபி தோட்டத்தில் தஞ்சம் அடைந்தனர். 2 மணி நேரத்துக்கு பின்னர் காட்டு யானைகள் அங்கிருந்து சென்றன.

இதனால் வெள்ளம் மற்றும் காட்டு யானைகளிடம் இருந்து அந்த குடும்பம் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News