இந்தியா

வயநாடு நிலச்சரிவு: மிகவும் மோசமான நிலை தொடர்கிறது- கேரள மாநில தலைமைச் செயலாளர்

Published On 2024-07-30 10:13 GMT   |   Update On 2024-07-30 10:15 GMT
  • நாங்கள் 70-க்கும் மேற்பட்ட உடல்களை எடுத்துள்ளோம். உடல்களை மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
  • அதிகமான மக்கள் காணாமல் போனதாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளோம். பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கனமழை காரணமாக வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு நாட்கள் (இன்று மற்றும் நாளை) ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால் மேலும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மிகவும் மோசமான நிலை தொடர்வதாக கேரள மாநில தலைமை செயலாளர் டாக்டர் வி. வேணு தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலை குறித்து கேரள மாநில தலைமை செயலாளர் டாக்டர் வி. வேணு கூறியதாவது:-

வயநாட்டில் இன்னும் மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. நாங்கள் 70-க்கும் மேற்பட்ட உடல்களை எடுத்துள்ளோம். உடல்களை மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். விசாரணை நடத்தப்பட்டு உடல் பரிசோதனைக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதிகமான மக்கள் காணாமல் போனதாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளோம். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.

அடிப்படை பிரச்சனை என்னவென்றால் ஒரு பகுதி (region) முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியின் பெரும்பகுதியை எங்களால் சென்றடைய முடியவில்லை. ஒரு சிறிய குழு ஆற்றைக் கடந்து அந்த பகுதியை அடைந்துள்ளது. ஆனால் உதவி வழங்கி, மீட்புப்பணியில் ஈடுபட இன்னும் அதிகமானோரை அனுப்ப வேண்டியது அவசியம்.

இன்றும் நாளையும் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே எங்களால் ஹெலிகாப்படரை இயக்க முடியாது. இதனால் வான்வழி மீட்பு, மற்றும் வான்வழியாக பொருட்களை கொண்டு செல்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிலம் வழியாக மட்டுமே மீட்புப்பணி மேற்கொள்ள முடியும் என்பதால் மிகவும் சவாலானது. ஆற்றில் வெள்ளம் அதிகமாக ஓடுகிறது. பாலம் இழுத்துச் செல்லப்பட்டது. இது பேரிடியாகும். என்டிஆர்எஃப் உள்ளது. ராணுவ உதவியையும் பெற்றுள்ளோம். மற்ற அமைப்புகளும் உதவி செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கேரள மாநில தலைமை செயலாளர் டாக்டர் வி. வேணு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News