மேற்கு வங்க ரெயில் விபத்து.. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி
- ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
- விபத்து பகுதியில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங்கில் நடைபெற்ற ரெயில் விபத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமுற்றனர். ரெயில் விபத்து பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக குடியரசு தலைவர் தனது எக்ஸ் தள பதிவில், "மேற்கு வங்காள மாநிலத்தின் டார்ஜிலிங்கில் அரங்கேறிய ரெயில் விபத்து சம்பவம் வேதனை அடைய செய்கிறது. எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருடனேயே உள்ளது. காயமுற்றவர்கள் விரைந்து குணமடையவும், மீட்பு பணிகள் விரைந்து நடைபெறவும் விழைகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், "மேற்கு வங்க ரெயில் விபத்து சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்றவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன்."
"அதிகாரிகளுடன் பேசி, கள நிலவரம் குறித்து கேட்டறிந்தேன். மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. விபத்து பகுதிக்கு ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் வந்து கொண்டிருக்கிறார்."
"ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.