இந்தியா

டெல்லி முதல்-மந்திரி அதிஷி பதவியேற்பு விழா எப்போது?

Published On 2024-09-18 04:47 GMT   |   Update On 2024-09-18 04:47 GMT
  • டெல்லி புதிய முதல்-மந்திரியாக அதிஷி தேர்வு.
  • கவர்னர் வழங்கும் தேதிகளை பொறுத்து பதவியேற்பு விழா.

புதுடெல்லி:

டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் நிபந்தனை களுடன் ஜாமீன் வழங்கியது. இதனால் முதல்-மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய முதல்-மந்திரியாக மூத்த அமைச்சர் அதிஷி தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

அப்போது புதிய முதல்-மந்திரியாக அதிஷி தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தையும், கவர்னரிடம் அதிஷி கொடுத்தார்.

டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படியே அதிஷி பதவியேற்பது எப்போது? புதிய அரசு பதவி ஏற்பது குறித்து முடிவு செய்யப்படும்.

இதற்கிடையே டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டம் வருகிற 26, 27-ந்தேதிகளில் நடைபெற உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அன்றைய தினம் புதிய முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி சிறப்புரையாற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், 26, 27-ந்தேதிகளில் நடை பெறும் சிறப்பு கூட்டத்திற்கு டெல்லி அரசு அழைப்பு விடுத்துள்ளது.

டெல்லி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகள் குறித்து இந்த கூட்டத்தில் அதிஷி பேசுவார். ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு, கவர்னர் வழங்கும் தேதிகளை பொறுத்து பதவியேற்பு விழா நடைபெறும்.

இதுவரை பதவியேற்பு விழா குறித்து உறுதியான தேதி முடிவாகவில்லை என்றனர்.

இது தொடர்பாக சட்ட வல்லுனர்கள் கூறுகையில், டெல்லி யூனியன் பிரசேதம் என்பதால் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது. டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மிக்கு முழு பெரும் பான்மை உள்ளது. எனவே அதிஷி முதல்-மந்திரியாக பொறுப்பேற்பதில் சிக்கல் எதுவும் இருக்காது என்றனர்.

Tags:    

Similar News