பாராளுமன்ற தேர்தல் 2024

யார் இந்த கேஎல் சர்மா? அமேதியில் ராகுலுக்கு பதில் போட்டி

Published On 2024-05-03 05:37 GMT   |   Update On 2024-05-03 06:27 GMT
  • அமேதி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளில் ஒன்றாகும்.
  • கேஎல் சர்மா சோனியா குடும்பத்துக்கு மிக மிக நெருக்கமானவர்.

அமேதி தொகுதி காங்கி ரஸ் வேட்பாளராக கேஎல் சர்மா அறிவிக்கப்பட்டதும் காங்கிரஸ் கட்சியினரே ஆச்சரியம் அடைந்தனர். நாடு முழுவதும் யார் இந்த கேஎல் சர்மா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளில் ஒன்றாகும். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் முதல் முதலாக இந்த தொகுதியில் ராகுல் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதிஇரானியிடம் தோல்வியை தழுவினார்.

இதன் மூலம் இந்த தொகுதி காங்கிரசிமிருந்து பா.ஜ.க. கைக்கு மாறியது. அங்கு மீண்டும் ஸ்மிருதி இரானி இந்த தடவை களம் இறக்கப்பட்டுள்ளார். இந்த தடவையும் ராகுல் அங்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வயநாடு தொகுதியில் களம் இறங்கிய ராகுல் அமேதியில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை எனவே பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, இந்திராகாந்தியின் உறவினர் ஷீலா கவுலின் பேரன் ஆகிய இருவரில் ஒருவர் வேட்பாளராக தேர்வு பெறலாம் என்று தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் அனை வரது எதிர்ப்பார்ப்பையும் தகர்க்கும் வகையில் கேஎல் சர்மா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் சோனியா குடும்பத்துக்கு மிக மிக நெருக்கமானவர்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த இவர் காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர். காங்கிரசில் சேர்ந்து அந்த கட்சிக்காக சேவையாற்றி வந்த அவர் 1983-ம் ஆண்டு ரேபரேலி தொகுதிக்கு வந்து தொகுதி பொறுப்பாளராக பதவி ஏற்றார்.

அன்று முதல் ராஜீவ்காந்தி, சோனியாகாந்தியின் தனிப்பட்ட அன்பை சம்பாதித்தார். ராஜீவ்காந்திக்காக அவரது பிரதிநிதி போல அவர் ரேபரேலி தொகுதியில் பணியாற்றி வந்தார்.

ராஜீவ் மறைவுக்கு பிறகு சோனியா குடும்பத்தினருடன் சர்மாவுக்கு மேலும் நட்புறவு அதிகரித்தது. சோனியா ரேபரேலி தொகுதி எம்.பி.யாக இருந்த 4 தடவையும் அவரது பிரதிநிதியாக ரேபரேலி தொகுதியில் பணியாற்றி வந்தார்.

இன்னும் சொல்லப் போனால் அறிவிக்கப்படாத எம்.பி. போலவே அவர் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி பணிகளில் ஈடுபட்டார். இதன் காரணமாக அந்த தொகுதியில் அவருக்கு அதிக பேருடன் தொடர்பு ஏற்பட்டது.

2004-ம் ஆண்டு ராகுல்காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்ட போது அங்கும் சென்று ராகுலுக்காக கட்சி பணிகளிலும், தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டார். 2009, 2014, 2019 தேர்தல்களிலும் அமேதி, ரேபரேலி தொகுதிகளின் காங்கிரஸ் பொறுப்பாளராக பணியாற்றினார்.

அவரது சேவையை கவுரவிக்கும் வகையிலேயே சோனியா அவரை அமேதி தொகுதி வேட்பாளராக களம் இறக்கி உள்ளார். ராகுலுக்கு பதில் அவர் போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அமேதி தொகுதியை தன்வசமாக்கி வைத்திருக்கும் மத்திய மந்திரி ஸ்மிருதிஇரானிக்கு கேஎல் சர்மாவால் நெருக்கடி கொடுக்க இயலுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

Tags:    

Similar News