தங்க சங்கிலியை பறித்தவரை மடக்கிப்பிடித்த பெண் என்ஜினீயர்
- அஸ்வதி துரிதமாக செயல்பட்டு அந்த நபரின் சட்டையையும், கழுத்தையும் உறுதியாக பிடித்துக்கொண்டார்.
- இந்த சம்பவத்தில் நகையை பறித்த நபருக்கும், அஸ்வதிக்கும் காயம் ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாயிக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜேஷ். இவருடைய மனைவி அஸ்வதி (வயது30), ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் மாலையில் சேங்கோட்டு கோணம் பகுதியில் உள்ள ஒரு மருந்துக்கடையில் மருந்து வாங்கிவிட்டு கணவருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் அஸ்வதியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். பறித்த வேகத்தில் தங்க சங்கிலி பல துண்டுகளாக அறுந்தது.
உடனே அஸ்வதி துரிதமாக செயல்பட்டு அந்த நபரின் சட்டையையும், கழுத்தையும் உறுதியாக பிடித்துக்கொண்டார். அந்த நபர் அஸ்வதியை இழுத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றார். ஆனால் அஸ்வதி தனது பிடியை விடாமல் அந்த நபரை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இழுத்து போட்டார்.
இதைப்பார்த்து அக்கம்பக்கத்தில் நின்ற பொதுமக்கள் விரைந்து வந்து அந்த நபரை பிடித்தனர். இதற்கிடையே அந்த நபர் கையில் கிடைத்த தங்க சங்கிலி துண்டை வாயில் போட்டு விழுங்க முயன்றார். ஆனால் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து அவரது வாயில் இருந்து நகையை வெளியே எடுத்தனர். இந்த சம்பவத்தில் நகையை பறித்த நபருக்கும், அஸ்வதிக்கும் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து கழக்கூட்டம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்ததும் அந்த நபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரித்தனர்.
விசாரணையில் அவர் திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாயிக்கோணம் பகுதியை சேர்ந்த அனில்குமார் (40) என்பதும், அவர் வந்த மோட்டார் சைக்கிள் திருவனந்தபுரம் வஞ்சியூரில் இருந்து திருடி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நகை பறித்த நபரை பெண் என்ஜினீயர் மோட்டார் சைக்கிளில் இருந்து பிடித்து கீழே தள்ளிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.