பங்குச்சந்தை விலை உயர்வால் சொமாட்டோ நிறுவனத்தின் மூலதனம் 2 லட்சம் கோடியை எட்டியது
- இந்திய எலைட் ல்லியனர் கிளப்பில் தீபிந்தர் கோயலும் இடம் பிடித்துள்ளார்.
- சந்தை மூலதனம் ரூ.2 லட்சம் கோடியை எட்டியது.
மும்பை:
டெல்லி ஐ.ஐ.டி. பட்டதாரியான தீபிந்தர் கோயல், பங்கஜ் சத்தாவுடன் இணைந்து கடந்த 2008-ம் ஆண்டு புடீபே என்ற உணவக டைரக்டரியை தொடங்கினார். அதன்பின்னர் 2010-ம் ஆண்டு சொமாட்டோ நிறுவனமாக அதனை மாற்றியமைத்தார்.
இதையடுத்து 2018-19-ம் ஆண்டு அந்த நிறுவனம் 1 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டியது. இதையடுத்து, சொமாட்டோ யூனிகார்ன் நிறுவனமாக மாறியது. அதே ஆண்டில் பங்கஜ் சத்தாவும் நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில், தேசிய பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் சொமாட்டோ நிறுவனப் பங்கின் விலை 4.2 சதவீதம் அதிகரித்தது. இதையடுத்து, முன்னெப்போதும் இல்லாத அளவில் சொமாட்டோ பங்கின் விலை ரூ.232-ஐ தொட்டது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் பங்கின் விலை ரூ.222-ஆக காணப்பட்டது.
சொமாட்டோ பங்கின் விலை புதிய உச்சத்தை தொட்டதையடுத்து அந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.2 லட்சம் கோடியை எட்டியது. இதையடுத்து இந்திய எலைட் ல்லியனர் கிளப்பில் தீபிந்தர் கோயலும் இடம் பிடித்துள்ளார்.
சொமாட்டோ நிறுவனத்தில் தீபிந்தர் கோயலுக்கு 36.95 கோடி பங்குகள் அல்லது 4.24 சதவீத பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.