சிறப்புக் கட்டுரைகள்

குடும்பமும் அலுவலகமும்!

Published On 2024-06-23 09:18 GMT   |   Update On 2024-06-23 09:18 GMT
  • நேர்த்தியாகப் பகுத்து வாழ்வதில்தான் திறமை இருக்கிறது.
  • கவனக்குறைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும்.

குடும்பத்தின் மீதும் அலுவலகக் கடமைகள் மீதும் அக்கறை கொண்டுள்ள அன்பின் வாசகர்களே! வணக்கம்!.

குடும்பமாக வாழ்வது என்பது உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள சமூகக் கடமை ஆகும். அதே நேரத்தில், குடும்ப வாழ்வியலைச் செம்மையாக நடத்துவதற்கான அடிப்படைத் தேவையான பொருளாதாரத்தை ஒவ்வொரு மனிதனும் யாதானுமொரு தொழில் செய்தோ! அல்லது ஏதாவதொரு அலுவலகத்தில் பணிபுரிந்தோ ஈட்டியே ஆகவேண்டும் என்கிற கட்டாயமும் உண்டு.

தனக்கு வாய்த்துள்ள ஒவ்வொரு நாளையும் குடும்பத்திற்கென ஒரு நேரம், பணியாற்றிப் பொருளீட்டுவதற்கென ஒரு நேரம், ஓய்விற்கும் பொழுதுபோக்கிற்கும் என சில போழுதுகள் ஆகியவற்றை நேர்த்தியாகப் பகுத்து வாழ்வதில்தான் திறமை இருக்கிறது.

ஒவ்வொரு மனிதனும் குடும்பத்தையும் வேலையையும் சரிசமமாகப் பகுத்துக் கொண்டு, சமநிலை பிறழ்ந்துவிடாமல் வாழவேண்டும் என்றுதான் கருதுகிறான். நடந்து செல்ல இரண்டு கால்கள் இருக்கலாம்; ஆனாலும் நடக்கும்போது ஒருகால் முன்னே செல்லும்போது மற்றொருகால் பின்னே போவதைப் போலத்தான் இவ்விரண்டிற்குமான முக்கியத்துவங்கள் இருக்க வேண்டும்.

சிலர், 'எனக்கு அலுவலக வேலைதான் முதல் மனைவி!' என்று அலுவலகங்களில் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். குடும்பத்தை மறந்து அலுவலகமே கதி எனக் கிடப்பவர்களும் உண்டு. சிலரை 'மதுப் பிரியர்கள்' என்று அழைப்பதைப் போல இவர்களை `வேலைப்பிரியர்கள்' என்று அழைப்பார்கள். நம்மை நம்பி வாழும் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு இந்த வேலைதான் காரணம் என்றாலும், குடும்பத்திற்காகவும் நேரம் ஒதுக்கினால்தானே அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்?.

சிலர் அலுவலகத்தில் இருந்தாலும் சதா குடும்ப நினைவாகவே இருப்பார்கள். அலுவலக வேலையைப் பார்க்காமல் குடும்ப வேலைகளையே திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். வேலைக்குத் தாமதமாக வருவது, நேரம் முடிவதற்கு முந்தியே சென்று விடுவது; அலுவலக வசதிகளைக் குடும்ப வேலை களுக்குப் பயன்படுத்துவது; தனது பணி அதிகாரங்களைச் சுயலாபங்களுக்காக மட்டும் பயன்படுத்துவது; மொத்தத்தில் வாங்குகிற சம்பளத்திற்கான வேலையைக்கூடப் பார்க்காமல் வெட்டியாய் அமர்ந்திருப்பார்கள்.

சிலர், உண்மையிலேயே அலுவலகப் பணிச்சுமை, மிகுந்திருந்தாலும், வெளிப்படையாகத் தெரிவிக்காமல் மன அழுத்தத்துடன் வேலைபார்த்து வருவார்கள். ஒரு கட்டத்தில் குடும்பத்தில் மனைவி, குழந்தைகள் மீது அக்கறை காட்ட முடியாமலும், அலுவலகப் பணியைச் சரிவர முடிக்க முடியாமலும் மனவிரக்திக்கு ஆளாகி விடுவார்கள். இதுபோன்ற சமத்தன்மை இல்லாமல் அலுவலகத்தையும் குடும்பத்தையும் ஈடுகட்ட முடியாமல் தவிப்பவர்கள், ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் தோல்வி அடைந்து விடுகிறார்கள்.

எல்லாருக்கும் நேரம் இருக்கிறது; எல்லாவற்றிற்கும் நேரம் இருக்கிறது; நேரத்தைப் பகிர்ந்து கொள்வதில் திறமை; இயன்ற வேலையை மட்டுமே ஒத்துக்கொள்கிற நேர்மை; எதையுமே பரபரப்பின்றிப் பொறுமையோடு செய்கின்ற அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய இவற்றால் எத்தகைய பணியையும், வீட்டிலும் சரி! பணியிடத்திலும் சரி! சுணக்கமின்றிச் செய்து முடிக்கலாம்.

அந்த காலத்தில் ஓர் ஆசிரியர் காலையில் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் எல்லா மாணவர்களையும் அடிஅடியென அடிக்கத் தொடங்கினால், மாணவர்களே பேசிக்கொள்வார்கள்,' வீட்டில் மனைவியிடம் வாங்கி வந்ததை இங்கே மாணவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்!'.

அதேபோல அலுவலகத்துக்குள் நுழைகிற மேலதிகாரி பார்க்கிற எல்லார் மீதும் எரிந்து விழுந்தால்,'வீட்டில் மேடம் நல்ல குடு குடுத்திருப்பாங்க போல' எனப் பணியாளர்கள் பேசிக்கொள்வார்கள். அதே போல அலுவலகம் முடிந்து வீட்டுக்குத் திரும்பிய அப்பா, பிள்ளைகள் மீது காரணமின்றிக் கோபம் கொள்வதும், மனைவி, கணவர்மீது எரிந்துவிழுவதும், அலுவலகம் தந்தனுப்பிய விரக்தித் தபால்களின் விளைவுகள்.

சிலர் சொல்வார்கள், அலுவலகமும் குடும்பமும் எண்ணெயும் தண்ணீரும் போல; ஒட்டவே ஒட்டாது என்று. ஆனால் உண்மை அதுவன்று. ஒரு நல்ல குடும்பப் பாங்கான மனிதராலேயே நல்லபடியாக ஓர் அலுவலகத்தைக் கொண்டு செலுத்த முடியும். இதை அப்படியே திருப்பிப் போட்டும் சொல்லலாம்.

ஆனால் கலந்து குழப்பிக்கொள்ளக் கூடாது. இன்னும் சொல்லப்போனால், ஒரு குடும்பத்தைப்போல அரவணைப்பு உணர்வோடு அலுவலகத்தை நடத்தலாம்; ஆனால் ஓர் அலுவலகத்தைப்போல விதிமுறைகளோடு குடும்பத்தை நடத்துவது கடினம். ஏனெனில் கோப்புகளைத் தாண்டியது குடும்பப் பாசம்.

படிப்பிலும் திறமையிலும் சிறப்பான ஓர் இளைஞன் ஒரு பெரிய நிறுவனத்தின் மேலாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்திருந்தான். இரண்டு மூன்று சுற்றுகளில் தேர்ந்துவிட்டான்; கடைசிச் சுற்று நேர்முகச் சுற்று; அதை அந்த நிறுவனத்தின் இயக்குநரே நேரடியாகக் கலந்துகொண்டு நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதில் தேர்ந்துவிட்டால் நேராக மேலாளர் பணியில் அமர்ந்து விடலாம்.

அன்று நேர்முகத் தேர்வுக்காக இயக்குநர் அறையில் காத்திருந்தான் அந்த இளைஞன். இயக்குநர் வந்தார்; அவனது தன்விவரக் குறிப்புகளைக் கவனத்துடன் படித்தார். பள்ளிக் கல்வியிலிருந்து, பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு என எல்லாவற்றிலும் முதன்மை மதிப்பெண்களைப் பெற்றிருந்தான். எந்த ஆண்டிலும், எந்தப்படிப்பிலும் சோடை போகாத கல்விச் சாதனைகளை அவன் கொண்டிருந்தான்.

நேர்முகத்தேர்வை ஆரம்பித்தார் இயக்குநர்," பள்ளிப் படிப்புப் படிக்கும்போது நீ கல்வி உதவித்தொகை ஏதேனும் பெற்றாயா?".

"இல்லை. நான் ஆராய்ச்சிப்படிப்பை முடிக்கும் வரை எந்த உதவித் தொகையையும் பெறவில்லை" என்று பதிலளித்தான் இளைஞன்.

"அப்படியானால் உன் படிப்புக்கான முழுச் செலவையும் உன் தந்தைதான் செய்தாரா?" இயக்குநர் கேட்டார்.

" இல்லை. நான் ஒரு வயதுக் குழந்தையாய் இருந்தபோதே என் தந்தையார் காலமாகிவிட்டார். என் தாய்தான் என் படிப்புச் செலவைப் பார்த்துக் கொண்டார்.

" உன் தாயார் என்ன வேலை செய்து வருகிறார்?"

" வீடுகளில் அழுக்குத் துணிகளை வாங்கி அவற்றை எங்கள் வீட்டில் வெளுத்துத் தரும் வேலையைப் பார்க்கிறார்".

இளைஞனின் அந்த பதிலைக்கேட்ட இயக்குநர், "எங்கே உன் கைகளைக் காட்டு!" எனக் கேட்டு அவனது இரண்டு உள்ளங்கைகளையும் தன்னுடைய கைகளால் தடவிப் பார்த்தார். இளைஞனின் உள்ளங்கைகள் பூப்போல மென்மையாக இருந்தன. "அப்படியானால் நீ துணிதுவைக்கும் பணியில் உன் தாயாருக்கு நீ உதவி செய்வதில்லையா?"கேட்டார் இயக்குநர்.

"ஐயா! நான் எப்போது உதவி செய்யப்போனாலும், 'நீ உன் படிப்பை மட்டுமே கவனி! என் வேலையை நானே பார்த்துக்கொள்கிறேன்' என்று மறுத்து விடுவார். மேலும் என்தாய் என்னைவிட அதிவேகமாகவும் தூய்மையாகவும் துணி துவைப்பதில் கெட்டிக்காரர்!" என்றான் இளைஞன்.

இயக்குநருக்கும் அந்த இளைஞனுக்கும் இடையே நடக்கும் உரையாடல்களைப் பார்த்தால் இது ஏதோ மேலாளர் பணிக்கான நேர்முகம்போலத் தோன்றாதுதான். இயக்குநர் இளைஞனைப் பார்த்து, " நீ என்றைக்காவது உன் தாயாரின் உள்ளங்கைகளை, இப்போது நான் உன் உள்ளங்கைகளைப் பிடித்ததுபோலத், தொட்டுப் பார்த்திருக்கிறாயா?" எனக் கேட்டார்." இல்லை!" என்றான் இளைஞன்.

"நான் இன்னும் ஒருநாள் தருகிறேன். நீ நேராக வீட்டுக்குப் போய், உன் தாயாரின் உள்ளங்கைகளை ஸ்பரிசித்துப் பார்!. நாளை மீண்டும் இங்கு நேர்முகம் வந்து உன் அனுபவம் சொல்!" என்று அனுப்பிவைத்தார்.

வீட்டுக்குப் போனான் இளைஞன்; மலர்ந்த முகத்தோடு வந்த அம்மா, " என்ன வெற்றிதானே! வேலை கிடைத்துவிட்டதா?" என்று கேட்டார். எதுவும் பேசாமல், அம்மாவின் கரங்களை இறுகப் பற்றி உள்ளங்கைகளை விரித்துப் பார்த்தான்.

சுருக்கம் சுருக்கமாய்க், காய்காய்த்துப் போய், சில இடங்களில் ஆறியும் சில இடங்களில் ஆறாததுமாய் ரணங்களோடு இருந்ததைப் பார்த்த மகன் "அம்மா!" என அலறிக் கண்ணீர் அருவிகொட்டச் செயலற்று நின்றுவிட்டான்.

`எனக்காகத் தண்ணீரும் சோப்பும் நாள்தோறும் பட்டுப்பட்டுக் காய்த்துப்போய், மேடும் பள்ளங்களுமாய் நீங்கள் பெற்ற அந்த ரணங்கள்தாம் நான்பெற்ற பட்டங்களா அம்மா?' மனத்துள் ஆர்ப்பரிக்கும் அழுகைக் கேள்வி களை வெளிப்படுத்த முடியாமல் நின்றான்.

மறுநாள், அதே நேர்முக அறை. இயக்குநர் வந்தார். "நேற்று நான் சொன்னதைச் செய்தாயா?; என்ன நடந்தது?" இளைஞனைப் பார்த்துக் கேட்டார். கொப்பளிக்கும் அழுகை யோடு, நேற்று அம்மாவிடம் பேசாத வார்த்தை களையெல்லாம் உணர்ச்சிப்பெருக்கோடு இயக்குநரிடம் கொட்டித் தீர்த்துவிட்டான் இளைஞன்.

"என்னை இந்த அளவுக்கு உயர்த்து வதற்கு என் அம்மா பட்ட பாடுகளையும் என் அம்மா செய்த தியாகங்களையும் நான் உணரும்படி செய்ததற்கு உங்களுக்கு என் நன்றிகள். இந்த வேலையை எனக்கு நீங்கள் வழங்குகிறீர்களோ இல்லையோ, இனிமேல் நான் பணியமர்ந்து கடமையாற்றப் போகிற ஒவ்வொரு நொடிகளிலும் நான் என் அம்மாவுக்கு நன்றியுடையவனாக இருப்பேன்!" என்றான் இளைஞன்.

"நல்வாழ்த்துகள்!; இன்றுமுதல் நீங்கள் இந்த நிறுவனத்தின் மேலாளராகப் பணியமர்த்தப் படுகிறீர்கள்!" என்று மகிழ்ச்சியோடு சொல்லி, இளைஞனுக்குப் பெருமிதத்தோடு கைகொடுத்தார்.

இயக்குநர் மேலும் சொன்னார்," தனக்காகத் தனது குடும்ப உறுப்பினர்கள் எப்படிக் கஷ்டப்படுகிறார்கள் என்பதை உணரத் தெரிந்த மனிதனாலேயே, அலுவலகத்தில் தன்னோடு பணிபுரியும் சக ஊழியர்களின் கஷ்ட நஷ்டங்களையும் உணர்ந்து செயல்படமுடியும். அப்படிப்பட்ட மனிதநேய உணர்வு, அலுவலக மேலாண்மைக்குக் குடும்பத்திலிருந்தே வரவேண்டும். அதனால்தான் நேர்முகத்தேர்வை நான் அந்தக் கோணத்தில் நடத்தினேன்".

அலுவலகம் என்பது ஒரு குறிப்பிட்ட சட்ட விதிமுறைகளுக்கேற்ப இயங்குவதுதான்; அதில் பணிபுரியும் அலுவலர்கள், கொடுத்த பணியை முடிப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டியவர்கள்தாம். ஆனாலும் சில ஏற்ற இறக்கங்கள், லாப நஷ்டங்கள், காலதாமதங்கள், கவனக்குறைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும்.

அலுவலகங்களில் இயந்திரங்கள் இருக்கும்; ஆனால் அவற்றை இயக்குபவர்கள் இயந்திரங்கள் அல்லவே!. மனிதர்கள்தாமே!. எனவே அலுவலக மேலாண்மையில் சட்டதிட்டங் களுக்கு இணையான முன்னுரிமையை மனித நேயத்திற்குத் தரவேண்டியதும் அவசியமாகிறது.

அன்பு, கருணை, இரக்கம், கனிவு, இன்சொல், அடுத்தவர் துன்பம்கண்டு உதவத் துடிக்கும் பரோபகாரம் , நட்பு, உறவாய்ப்பேணும் சகோதரத்துவம் இவற்றையெல்லாம் தாள்களும், பேனாக்களும், கோப்புகளும் உள்ள அலுவலகத்திலிருந்து கண்டெடுக்க முடியாது.

குடும்பம் என்னும் கோயில் தன்மையில் இருந்தே இவற்றை அலுவலிடத்திற்கு நாம் மடைமாற்றம் செய்ய வேண்டும்.

எத்தனை துன்பங்கள், எத்தனை சண்டை சச்சரவுகள் இருந்தாலும் குடும்பமே அமைதி தவழும் நந்தவனம். அப்படி அலுவலகத்தையும் ஆக்குவதற்குக் குடும்ப மேன்மைகளைப் புகுத்திக் கொண்டாடக் கற்றுக்கொள்வோம்!.

தொடர்புக்கு 9443190098

Tags:    

Similar News