சிறப்புக் கட்டுரைகள்

கொல்லூரும் குடச்சாத்ரி மலையும்!

Published On 2024-09-10 09:31 GMT   |   Update On 2024-09-10 09:31 GMT
  • கொல்லூர் தாய் மூகாம்பிகை கோவிலை அடையும்போது நம்மையும் அறியாமல் ஒரு பக்தி உணர்வு தோன்றும் என்பது உண்மை.
  • கோயிலில் இருக்கக்கூடிய ஆகம விதிகள் பூஜை முறைகள் அனைத்தும் ஆதிசங்கரால் உருவாக்கப்பட்டவை.

சென்ற வாரங்களில் மங்களூர்... உடுப்பி நகரங்கள் மற்றும் அந்த மாவட்டத்தை சார்ந்த முக்கியமான கோவில்களை கண்டோம். மேலும் பொழுதுபோக்கு அம்சங்கள் விளையாட்டு மற்றும் அழகிய கடற்கரை போன்ற விஷயங்களையும் அறிந்து கொண்டோம். இப்போது உடுப்பி மாவட்டத்திலேயே இருக்கின்ற உலகப் புகழ் பெற்ற தாய் மூகாம்பிகை என்ற அருள் நிறைந்த அன்னையை தரிசிக்க மங்களூரில் இருந்து அல்லது உடுப்பிலிருந்து போவதற்கான வழிகளும் வாய்ப்புகளும் பார்க்கலாமா..?

சென்னையில் இருந்து மதியம் மங்களூர் செல்லும் தொடரி ஈரோடு- பாலக்காடு- கோழிக்கோடு வழியாக மங்களூர் அதிகாலைச் சென்று அடைகிறது. ரெயில் நிலையத்திலிருந்து வெளியே வரும் போதே பேருந்து நடத்துனர்களும் வாடகை வண்டி வைத்திருப்போர்களும் உடுப்பி... உடுப்பி... கொல்லூர்... கொல்லூர் என்று குரல் கொடுத்துக் கொண்டே இருப்பதை அறியலாம்.

நமக்கு ஏற்றபடி வாடகை காரோ அல்லது பேருந்தையோ நமது மணிப்பர்சின் கனத்தை பொறுத்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். வாடகை கார் இருந்தால் முன்பே சொன்னபடி போகும் வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்த கோயில்கள் எல்லாம் தரிசித்துக் கொண்டு செல்லலாம். குடும்பத்துடன் பிள்ளைகளை அழைத்துச் செல்லும்போது மழைக்காலங்கள் அல்லாத சீசனில் அவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு விஷயங்களை அனுபவிக்கும்படியாக நம்முடைய பயணத்தை நாம் அமைத்துக் கொள்ளலாம்.

மங்களூரில் இரண்டு ரெயில் நிலையங்கள் இருக்கின்றன. மங்களூர் ஜங்ஷன் மற்றும் மங்களூர் சென்ட்ரல் இந்த இரண்டு ரெயில்வே நிலையங்களில் இருந்தும் நேரத்திற்கு ஏற்றபடி ரெயில்கள். கொங்கண் ரெயில்வே என்று அழைக்கப்படும் கோவா- மும்பை செல்லும் தொடரிகளில் நாம் உடுப்பி மாவட்டம் குந்தாப்பூர் தாலுகாவில் உள்ள பைந்தூர்என்ற ரெயில் நிலையத்தை அடையலாம். இது ஏறக்குறைய 18 கி.மீ தொலைவில் உள்ளது. சில ரெயில்கள் குந்தாபுரில் நிற்கும்இது சுமார் 28 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

எனவே நமக்கு தேவையான நிலையம் வழியாக செல்லும் தொடரிகளை பதிவு செய்து கொள்ளலாம். பைந்தூர் ரெயில் நிலையம் கொல்லூருக்கு அருகில் உள்ளது, இறங்கிக் கொள்ளலாம். ஆனால், குந்தாபூரிலிருந்து பைந்தூர் வழியாக பேருந்தில் பயணிக்கும்போது ஒரு அழகான இடத்தில்... இடது பக்கம் அரபிக் கடலும் வலது பக்கம் நம் நலம் விசாரித்து நம்முடன் வரும் அழகிய நதியும் நம்மை அரவணைத்துச் செல்ல... சிறிது தூரம் நாம் கடலுக்குள் செல்வதைப் போல நடுவில் உள்ள அந்த சாலையில் பயணிப்பதும் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தக்கூடிய பயணமாக மழைக் காலங்களில் அமையும்.

தூங்கிக் கொண்டே வரும் வழியில் சில்லென்ற காற்று முகத்தில் பட சற்றே கண்விழித்துப் பார்த்தபோது கடலுக்கு நடுவில் பேருந்து போகிறதோ என்ற உணர்வு அந்த இடத்தை கடக்கும் போது எனக்கு ஒரு முறை கிடைக்கப்பெற்றது.

வலப்பக்கம் நதியின் ஓரம் நிமிர்ந்த தென்னை மரங்களின் கீற்றுக்கள் ஆடி நம்மை வரவேற்பதை போல பசுமையாகவும்.. இடது பக்கம் இறங்கி கால் நனைத்து விளையாடலாம் போன்ற கடலையும் ஒரு சேர காணும் காட்சி மறக்க முடியாத மகிழ்ச்சியான நிமிடங்களாக இன்னும் இதயத்தில் நிழலாடிக் கொண்டிருக்க..

 

இப்படியான இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே நாம் கொல்லூர் தாய் மூகாம்பிகை கோவிலை அடையும்போது நம்மையும் அறியாமல் ஒரு பக்தி உணர்வு தோன்றும் என்பது உண்மை.

பேருந்து நிலையம் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டாலும் அங்கிருந்து கோவிலுக்கு செல்வதற்கான ஆட்டோக்கள் நமக்கு கிடைக்கும். ஆட்டோவிலேயே நாம் கோவிலை அடையலாம்.

சவுபர்ணிக்கா நதிக்கரையோரம் அமைந்திருக்கின்றது கோவில். மழைக்காலங்களில் சவுபர்ணிக்கா கரை புரண்டு ஓடுவதை காண்பதற்கு மெய்சிலிர்க்கும். ஆனால் குளிப்பதற்கு சற்று தொலைவிலுள்ள ஆற்றுக்கு (பல்குணி) சென்று குளித்து வரவேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு கோடைக்காலத்திலும் நதி நீரில் நன்றாக குளித்துவிட்டு மகிழ்ச்சியாக வேட்டி சட்டையுடன் கோவிலுக்கு ஆண்களும்... பாரம்பரிய உடையில் பெண்களும் வருவார்கள். இப்போது கோடைக்காலத்தில் அந்த நதி ஓடைப் போன்று காட்சியளிக்கிறது.

முந்தைய காலத்தில் ஒரு அரக்கன், தேவர்கள் முனிவர்கள் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், சாகா வரம் வேண்டி சிவனை நினைத்து கடுந்தவம் புரிந்து வந்ததை அறிந்த தேவி மூகாம்பிகை, அவன் வரத்தை கேட்பதற்று முன்பாகவே அவனை ஊமை ஆக்கிவிட்டாள். அதனால் அவன் மூகாசுரன் (கன்னடத்தில் மூகா என்றால் ஊமை என்று பொருள்) என்று அழைக்கப்பட்டான். இந்த நிகழ்ச்சியினால் அம்பாள் மூகாம்பிகை என பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் குடச்சாத்திரி என்ற மலையின் அடிவாரத்தில் அமைதியாக இருக்கும் ஊர் கொல்லூர். இத்தலம் கொல்லூர் என்று அழைக்கப்படுவதற்கு காரணம் முன்னொரு காலத்தில் கோல மகரிஷி என்பவர் சிவனை நோக்கி தவமிருக்க, சிவபெருமானும் காட்சியளித்து "என்ன வரம் வேண்டும்" என்று கேட்டருள, உலக மக்கள் யாவரும் ஒற்றுமையாய் வாழ பொழிய வேண்டும் மும்மாரி. அனைத்து உயிர்களும் செழித்து இருக்க வேண்டும்.. எல்லோரும் ஆயுள் ஆரோக்கியமும் பெற்று நலமுடன் வாழ வேண்டும். எனக்கென்று எதுவும் வேண்டாம் என கோல முனி கேட்க ஈசனும் அவ்வாறே மனமகிழ்ந்து ஒரு லிங்கத்தை அமைத்துக் கொடுக்க...

கோல மகரிஷி, "சக்தி இல்லாமல் லிங்கத்தை வணங்குவது எப்படி" என வினவ லிங்கத்தின் மத்தியில் இருந்த ஸ்வர்ண (தங்க)ரேகையை காட்டி இதன் இடது பக்கத்தில் கலைமகள் அலைமகள் மலைமகள் மூவரும் அரூபமாக இருப்பதாகவும் ஸ்வர்ணரேகையின் வலப்புறம் பிரம்மா விஷ்ணு சிவபெருமானும் இருப்பதாகவும்... அந்த லிங்கத்தை நாள்தோறும் பூஜித்து வருமாறு கோல மகரிஷிக்கு வரம் அருள இந்த ஊர் கொல்லுரானதாக அறிகிறோம்.

இங்கு மகிஷாசுரன் என்ற அரக்கன் அனைவரையும் துன்புறுத்த அனைவரின் நலத்தை விரும்பும் கோல மகரிஷி அம்பாளை நோக்கி கடுந்தவம் புரிந்தார். முனியின் வேண்டுகோளுக்கு இறங்கி தேவகணங்களின் தலைவரான வீரபத்திரர் உதவியுடன் அசுரனோட போரிட்டு அவனை அழித்தாகவும் கூறப்படுகிறது.

இந்த இடம் கொல்லூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் மாரண கட்டா என வழங்கப்படுகிறது.

இர.தேன்மொழி, பெங்களூர்

 

ஆதிசங்கரர் வாழ்ந்த காலத்தில் அவர் புண்ணிய பாரத தேசமெங்கும் புனித யாத்திரை செய்தபோது, கொல்லூர் மக்கள் தங்க ரேகை மின்னக்கூடிய லிங்கத்தில் அம்பாள் இருந்தாலும் அன்னையின் அருள்வாய்ந்த முகத்தை எங்களால் காண முடியவில்லை என்று கேட்க... ஆதிசங்கரர் அம்பாளை ஆழ்ந்த தியானத்தில் வணங்க....அவருக்கு மூகாம்பிகை நான்கு கைகளுடன்.. கைகளில் சங்கு சக்கரம் பத்மாசன கோலத்தில் அமர்ந்தபடி காட்சியளிக்க அப்படியே தெய்வ சிலைகள் வடிக்கும் சிற்பியிடம் விவரித்து அம்பாளின் அழகிய உருவம் அருளின் வடிவமாக நிறுவப்பட்டது. ஸ்வர்ண ரேகையோடும் லிங்கத்தின் பின்புறம் மூகாம்பிகை சிலை வடிவமாக ஸ்தாபிக்கப்பட்டது. அதன் அடியில் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்திருப்பதை அறிகிறோம். அந்த சக்கரத்தில் 64 கோடி தேவதைகள் இருப்பதாக மக்களுக்கு நம்பிக்கை. எனவே இங்கு கேட்டவை கிடைக்கிறது.

இங்குள்ள சரஸ்வதி மண்டபத்தில் கலைகள் அரங்கேற்றப்படுகின்றன. பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளுக்கு அக்ஷராப்யாசம் என்ற வழிப்பாடு முறையில் ஒரு தட்டில் அரிசி நெல் குவித்து முதலில் "அ", மற்றும் "ஓம்" போன்ற எழுத்துக்களை குழந்தைகள் விரல் பிடித்து எழுதுகிறார்கள். இதன் மூலம் அந்த குழந்தைகள் கல்வியிலும் கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. குருவாயூரில் மலையாள சகோதரர்கள் குழந்தைக்கு சோறு ஊட்டுவது போல்.. குழந்தைகளை இங்கு அழைத்து வந்து முதன் முதலாக கல்வி தொடர்பான பணியைத் தொடங்குகிறார்கள்.

கோயிலில் இருக்கக்கூடிய ஆகம விதிகள் பூஜை முறைகள் அனைத்தும் ஆதிசங்கரால் உருவாக்கப்பட்டவை. அதை இன்றளவும் தொடர்ந்து தவறாமல் கடைப்பிடித்து வருகிறார்கள்.

இந்த கோவிலில் குத்துவிளக்கு ஐந்து முகத்திலும் திரி வைத்து நெய் விளக்கு ஏற்றி வணங்குவது அம்பாளுக்கு சிறப்பு வழிபாடாக இருக்கிறது. தங்க ரதம் பக்தர்களின் வேண்டுதலுக்கு எற்ப வலம் வருகிறது.இதற்கு கட்டணம் உண்டு. இங்கு வெளிப்பிரகாரத்தில் வீரபத்திரருக்கு தனி சன்னதி உள்ளது.

கொல்லூருக்கு வருபவர்கள் மூகாம்பிகை தரிசிப்பதோடு நின்று விடாமல் இரண்டு..இரண்டரை மணி நேர பயணத்தில் குடச்சாத்ரி மலையின் மேலே மூகாம்பிகை தரிசனம் அளித்ததாக (ஜனனி... ஜனனி என்ற பாடல் நினைவுக்கு வருகிறதா?) கூறப்படும் மலையில் ஏறி நாம் அங்கிருக்கக் கூடிய முழுமையான இயற்கை அழகை ரசிக்க வேண்டும் என்றால், அந்த அருமையான உணர்வை பெற வேண்டும் என்றால் அங்கு செல்வதற்கு காலை முதல் மதியம் வரை பிரத்தியேகமான ஜீப்புகள் இயக்கப்படுகின்றன.

நம்மை குறிப்பிட்ட தூரம் வரை ஜீப்பில் அழைத்துச் செல்லும் வழியில் காடுகளையும் புல்வெளிகளையும் ரசித்துக் கொண்டே செல்லலாம். அதன் பிறகு அங்கிருந்து ஒரு சில கிலோமீட்டர்கள் நாம் மலையில் ஏற வேண்டியதாக இருக்கும். தகுந்த பாதுகாப்புடன் செல்வது அவசியம். தனி நபர்களாக செல்வது சரியாகாது. மழைக்காலங்களில்அட்டைப் பூச்சி போன்றவைகளும் வழித்தடத்தில் கற்கள் சரிவதற்கும் வாய்ப்பிருக்கிறது. மேலே சற்றே செங்குத்தான இடமாக ஏறுவதற்கு கடினமாக இருந்த போதும் இறுதியாக மலை உச்சியில் ஏறிய போது நமக்கு நாம் பட்ட அசௌகரியங்கள் மறைந்து ஒரு அமைதியான.. நம்முடைய ஆத்மாவை நாமே சுயதரிசனம் செய்யக்கூடிய ஒரு தனிமையான பசுமையான சூழலில் நாம் இருப்பதை உணர முடியும்.

அங்குள்ள மண்டபத்தில் அமர்ந்து சிலர் அமைதியாக தியானம் செய்வதையும் காண முடியும். பக்கத்தில் இருக்கின்ற மலை சரிவுகளில் கணபதி குகை உள்ளிட்ட சில குகைகள் இருப்பதாக சொல்கிறார்கள் சில குளங்களும் உள்ளன. அதை நாம் பகல் பொழுதில் கூட்டமாக சென்று பார்ப்பது பாதுகாப்பானதாக இருக்கக்கூடும்.

இவ்வாறாக மூகாம்பிகை காட்சியளித்ததாக நம்பப்படும் குடச்சாத்ரி மலைப்பகுதி ஒரு ரம்யமான சூழலில் தெய்வீக வாசம் கமழ்வதை நாம் நிச்சயமாக உணர முடியும். எனவே கொல்லூர் செல்பவர்கள் காலை நேரத்தில் மலைக்கு பக்தி பரவசமாகவோ... ட்ரெக்கிங் போக வேண்டும் என்றாலோ... அதற்கேற்ற படி உங்களுடைய திட்டத்தை அமைத்துக் கொண்டால் பயணம் சிறப்பாக அமையும்.

இப்போது வரவிருகின்ற தசரா பண்டிகை காலம் விசேஷமாக கொண்டாடப்படும். முப்பெரும் தேவிகளாக சரஸ்வதி லட்சுமி பார்வதி மூன்று தெய்வங்களும் ஒன்றிணைந்து இங்கு கொலுவிருப்பதால் தசரா பண்டிகைக்கான சிறப்பு இந்த கோவிலை தரிசனம் செய்வதன் மூலம் நிறைவடையும் என்று சொல்லலாம்....!

Tags:    

Similar News