சிறப்புக் கட்டுரைகள்

கணபதி என்றிடக் கவலை நீங்குமே!

Published On 2024-09-05 09:13 GMT   |   Update On 2024-09-05 09:13 GMT
  • ஒருமுறை திருமாலின் கரத்தில் உள்ள சுதர்சன சக்கரத்தை விளையாட்டாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டுவிட்டாராம் பிள்ளையார்.
  • அகத்திய முனிவர் தமது கமண்டலத்தில் கங்கை நீரை அடக்கி வைத்திருந்தார்.

எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும், பிள்ளையார் இந்து மதத்தின் எல்லாப் பிரிவினராலும் ஏற்கப்படக் கூடிய தெய்வமாக விளங்குகிறார்.

திருமாலை வழிபடும் வைணவர்களும் கூடத் `தும்பிக்கை ஆழ்வார்` எனப் பெயரிட்டு விநாயகரை வழிபடுகிறார்கள்.

சிவ குடும்பத்தின் மூத்த பிள்ளை விநாயகர். வாழ்வில் நேரும் தடைகள் அனைத்தையும் நீக்குபவர். விக்கினங்களை நீக்குபவர் என்பதால் அவர் விக்ன விநாயகர் எனப்படுகிறார்.

எந்தச் செயல் செய்தாலும் அதில் வரக்கூடிய விக்கினங்கள் நீங்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் விநாயகருக்கு முதல் வழிபாடு நிகழ்த்தப்படுகிறது. எந்தத் தெய்வத்தை பூஜித்தாலும் முதன்முதலில் மஞ்சள் பொடியால் செய்யப்பட்ட பிள்ளையாரை பூஜிக்கும் மரபு அனுசரிக்கப்படுகிறது.

இந்து மதத்தில் அறுவகைப் பிரிவுகளை வகைப்படுத்தி ஆறு வகையிலான வழிபாட்டு முறைக்கு வழிவகுத்தார் மகான் ஆதிசங்கர். சைவம், வைணவம், சவுரம், காணாபத்யம், கவுமாரம், சாக்தம் என்பனவே அவர் வகுத்த அறுவகை பக்தி நெறிகள்.

அவற்றுள் கணபதியை வழிபடும் நெறி `காணாபத்யம்` எனப்பட்டது. விநாயகரைத் துதித்து ஆதிசங்கரர் `முதாகராத்த மோதகம்` எனத் தொடங்கும் கணேச பஞ்சரத்னம் என்ற ஐந்து சுலோகங்களை அருளியுள்ளார்.

மக்கள் எதை எழுதினாலும் பிள்ளையார் சுழி போட்டுத்தான் எழுதத் தொடங்குகிறார்கள். பிரம்மன் தலையில் இட்ட சுழி எப்படியிருந்தாலும் நாம் பக்தியோடு தொடக்கத்தில் எழுதும் பிள்ளையார் சுழி பிரம்மன் இட்ட சுழியை நல்ல விதமாக மாற்றி விடும் என்பது நம் நம்பிக்கை.

பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போடும் வழக்கம் பாரத தேசத்தில் எல்லாப் பிரதேசங்களிலும் உள்ளது.

பிற தெய்வங்களைத் தோப்புக்கரணம் போட்டு வழிபடும் வழக்கம் இல்லை. பிள்ளையாரை வழிபடும்போது மட்டும் இந்த வழக்கம் எப்படி வந்தது என்பதை ஒரு கதை விவரிக்கிறது.

ஒருமுறை திருமாலின் கரத்தில் உள்ள சுதர்சன சக்கரத்தை விளையாட்டாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டுவிட்டாராம் பிள்ளையார்.

திருமாலுக்குத் தன் சகோதரி மீனாட்சியின் மகனான பிள்ளையார் மேல் மிகுந்த பாசம் உண்டு. ஆனால் பிள்ளையார் செய்த பிள்ளை விளையாட்டினால் அவரது ஆயுதமான சக்கரம் அவர் வாய்க்குள் போய்விட்டதே?

சக்கரம் மிகுந்த வலிமை நிறைந்தது. அது பிள்ளையாரின் உடலுக்குள் சென்று அவருக்கு எந்தக் கெடுதலும் செய்துவிடாமல் இருக்க வேண்டுமே எனப் பதறியது திருமாலின் உள்ளம்.

அதோடு அவரது சக்ராயுதம் எந்தச் சேதமும் இல்லாமல் அவருக்குத் திரும்பக் கிட்டவும் வேண்டும். சக்கரமில்லாமல் அவர் தீய சக்திகளை வதம் செய்ய இயலாது.

என்ன செய்தால் சுதர்சன சக்கரம் சேதமில்லாமல் அப்படியே முழுமையாகத் திரும்பக் கிடைக்கும்?

யோசித்தார் திருமால். பிள்ளையார் வாயைத் திறந்து உரக்கச் சிரித்தால் கட்டாயம் சக்கரம் கீழே உருண்டு விழுந்து விடும். பிள்ளையாரை எப்படிச் சிரிக்க வைப்பது?

திருமால் பிள்ளையாருக்கு வேடிக்கை காட்டக் கையால் காதுகளைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்து நடனமாடினாராம்.

அதைப் பார்த்த விநாயகருக்குச் சிரிப்புத் தாளவில்லை. அவர் வாய்விட்டுச் சிரிக்க சக்கரம் உருண்டு வெளியே வந்து விழுந்துவிட்டதாம்.

விநாயகரை மகிழ வைக்க, காதைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடும் முறை அப்போதிருந்துதான் தோன்றியது என்றும் பிள்ளையாருக்கு முதன்முதலில் தோப்புக்கரணம் போட்ட பெருமை திருமாலுக்குத்தான் உரியது என்றும் சொல்கிறது அந்தப் பழங்கதை.

பழங்காலப் பாடசாலைகளில் ஞாபக மறதியினால் நிகழும் சிறிய குற்றங்களுக்காகக் குழந்தைகளைத் தோப்புக்கரணம் போடச் செய்வதுண்டு. கிராமப் பஞ்சாயத்துகளிலும் தோப்புக்கரணம் போடுதல் குற்றங்களைச் செய்தவர்களுக்கு ஒரு தண்டனையாக வழங்கப்பட்டு வந்திருக்கிறது.

தோப்புக்கரணம் மூளை நரம்புகளைத் தூண்டும் என்றும் அதனால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஞாபக சக்தி வளர வேண்டும் என விரும்புகிறவர்கள் நாள்தோறும் விநாயகருக்கு எட்டுத் தோப்புக் கரணமாவது போடுவது நல்லது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும்!

தோப்புக்கரணம் போடுவதற்கு முன் இரு கரங்களால் அவரவர் நெற்றியின் மேல் புறத்தில் குட்டிக் கொள்ளும் வழக்கமும் நடைமுறையில் உண்டு. இந்த வழக்கம் எப்படி வந்தது என்பதற்கும் ஒரு கதை இருக்கிறது.

அகத்திய முனிவர் தமது கமண்டலத்தில் கங்கை நீரை அடக்கி வைத்திருந்தார். அவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தபோது, விநாயகர் காகமாக உருவெடுத்து வந்து அந்தக் கமண்டல நீரைச் சடாரெனத் தட்டிவிட்டார். அந்த நீர் காவிரி நீராகப் பெருக்கெடுத்து ஓடியது.

தியானம் கலைந்த அகத்தியர் யார் இந்தச் செயலைச் செய்தது எனச் சுற்றுமுற்றும் பார்த்தார். கமண்டலத்தைத் தட்டிவிட்ட காகம் அவர் எதிரே ஒரு சிறுவனாகத் தோற்றம் கொண்டு நின்றது.

சீற்றமடைந்த முனிவர் சிறுவன்தான் கமண்டல நீரைத் தட்டிவிட்டவன் என்ற எண்ணத்தில் அவன் தலையில் ஓங்கிக் குட்ட முயன்றார்.

ஆனால் என்ன ஆச்சரியம்! மறுகணம் அந்த தெய்வீகச் சிறுவன் தும்பிக்கையோடும் பெரிய காதுகளோடும் விநாயகப் பெருமானாக உருவெடுத்து அவருக்குக் காட்சி தந்தான்.

முழுமுதல் கடவுளான விநாயகரையே குட்ட எண்ணினோமே என வருந்தியது அகத்தியரின் நெஞ்சம். உடனே அதற்குத் தண்டனையாக அவர், தன் தலையில் தானே குட்டிக்கொண்டு விநாயகரிடம் மனமார மன்னிப்பு வேண்டினார்.

விநாயகர் அகத்தியரை மன்னித்தது மட்டுமல்ல, `இனி என்னை வழிபடுவோர் எல்லாம் உன்னைப் போல் தலையில் குட்டிக் கொண்டு வழிபடட்டும்` எனக் கூறியதாகச் சொல்கிறது அந்தக் கதை.

தோப்புக்கரணத்தைத் திருமால் தொடங்கி வைத்தார் என்றால், விநாயகர்முன் குட்டிக்கொள்ளும் வேண்டுதல் முறையைத் தொடங்கி வைத்தவர் தமிழ் முனிவரான அகத்தியர்தான்.

 

விநாயகரைச் சிதறு தேங்காய் உடைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில் உள்ளிட்ட சில கோயில்களில் சிதறு தேங்காய் வழிபாட்டிற்கென்றே பெரிய கல் தொட்டியைக் கட்டி வைத்திருக்கிறார்கள்.

அந்தக் கல் தொட்டியில் தேங்காயை வீசி உடைத்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நேர்த்தியாகச் செலுத்துகிறார்கள்.

விநாயகர் சன்னிதியில் தேங்காயைச் சிதறச் செய்தால், நம் துன்பங்கள் அனைத்தும் தூள்தூளாகச் சிதறி நம்மை விட்டு விலகி ஓடிவிடும் என அடியவர்கள் நம்புகிறார்கள்.

சிதறு தேங்காய்ச் சில்லுகள் குழந்தைகளுக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன. அந்த உடைந்த தேங்காய்ச் சில்லுகளை எடுத்துக்கொண்டு போகும் குழந்தைகளை யாரும் தடுப்பதில்லை.

ஜாதகத்தில் திருமணத்தடை இருப்பவர்கள் விநாயகரை வழிபட்டால் அந்தத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்று கருதப்படுகிறது.

விநாயகரின் தம்பியான முருகன் வள்ளியைக் காதலித்தபோது, அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளும் வகையில் யானை வடிவில் வந்து உதவியவர் பிள்ளையார் தானே? முருகனின் திருமணத்திற்கு உதவிய பிள்ளையார் தம் அன்பர்கள் அனைவரின் திருமணத்திற்கும் உதவுவார் என்பது நம்பிக்கை.

பொதுவாக குன்றுதோறும் குடிகொண்டு அருள்பாலிக்கும் கடவுள் முருகப் பெருமான்தான் என்றாலும் அரிதாக அண்ணன் விநாயகரும் மலைகளில் தென்படுவதுண்டு.

யானையே கானகங்களிலும் மலைகளிலும் வாழ்கிற விலங்குதானே? யானை வடிவம் கொண்ட விநாயகரும் மலையில் வசிப்பதில் வியப்பில்லையே?

 

திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில் விநாயகர், மலை உச்சியில் வீற்றிருக்கிறார். படியேறிச் சென்று அவரை வழிபடுவோரை வாழ்க்கையில் படிப்படியாக அவர் உயர்த்துகிறார்.

விநாயகர் பல்வேறு தோற்றங்களில் காட்சி கொடுக்கக் கூடியவர். விநாயகர் அளவு விதவிதமாகத் தோற்றமளிக்கும் கடவுள் வேறு இல்லை.

வீணையைக் கையிலேந்திய வீணாதர விநாயகர், மிருதங்கம் வாசிக்கும் மிருதங்க விநாயகர், சயன விநாயகர், வட இந்தியாவில் இரு மனைவியரோடு காட்சி தரும் சித்தி புத்தி விநாயகர், அண்மைக் காலங்களில் கணிப்பொறியை இயக்குபவராய்க் காட்சிதரும் கம்ப்யூட்டர் விநாயகர் என விநாயகர் காலத்திற்கேற்ற கோலம் கொள்ளும் கடவுளாக விளங்குகிறார். பக்தர்கள் அவரைத் தங்களுக்குப் பிடித்த வகையிலெல்லாம் வழிபட்டுப் போற்றுகிறார்கள்.

 

திருப்பூர் கிருஷ்ணன்

கந்த புராணம் எழுதிய கச்சியப்ப சிவாச்சாரியார், அண்ணன் விநாயகரை வணங்கிய பின்னரே தம்பி முருகனைப் பற்றி நூல் எழுதத் தொடங்குகிறார்.

`திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்

சகட சக்கரத் தாமரை நாயகன்

அகட சக்கர வின்மணி யாவுறை

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்!`

என்பது அவர் எழுதியுள்ள விநாயகர் துதி.

தமிழில் விநாயகர் மேல் இன்னும் பற்பல தோத்திரங்கள் எழுதப்பட்டுள்ளன. யோகசாத்திரம் முழுவதையும் உள்ளடக்கி `சீதக்களப செந்தாமரை` எனத் தொடங்கி, அவ்வையார் எழுதிய விநாயகர் அகவல், பாரதியார் பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் மேல் எழுதிய `விநாயகர் நான்மணிமாலை` போன்ற நூல்கள் பிரசித்தி பெற்றவை. இவற்றை பக்தியுடன் பாராயணம் செய்வதன் மூலம் விநாயகரின் அருளைப் பெற முடியும்.

இன்றளவும் விநாயகர் ஆன்மிக உணர்வுடைய அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து வருகிறார். தீய சக்திகள் அவரது பிளிறலைக் கேட்டு வேர்த்து விறுவிறுத்துக் காணாமலே போய் விடுகின்றன.

கோடி கோடி மத யானைகள் பணிசெய்யக் குன்றென விளங்கும் பெம்மானான விநாயகர் இந்திய மக்களை ஒருங்கிணைத்து நல்லவை வெற்றிபெறத் தொடர்ந்து அருள்புரிந்து வருகிறார். விநாயகரை வழிபட்டு அவர் அருள்பெற்று, அதன்மூலம் வீட்டையும் நாட்டையும் வளமாக்குவோம்.

`கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

கணபதி என்றிடக் காலனும் கைதொழும்

கணபதி என்றிடக் கருமம் ஆதலால்

கணபதி என்றிடக் கவலை நீங்குமே!`

(-திருமூலர் அருளிய திருமந்திரம்.)

தொடர்புக்கு:

thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News