சிறப்புக் கட்டுரைகள்
null

சுகபோக வாழ்வு தரும் சுக்கிரன்

Published On 2024-09-06 22:45 GMT   |   Update On 2024-09-06 22:45 GMT
  • சுக்கிரன் என்பவர் நவகிரகங்களில் ஒருவர்.
  • வாழ்விற்கு தேவையான அத்தனை சந்தோஷங்களையும் தரக்கூடியவர் சுக்கிரன்.

சுகபோகமாக வாழ்பவர்களைப் பார்த்து "அவர்களுக்கென்ன சுக்கிர திசை அடிச்சி கெடக்கு" என்பார்கள்.

ஒருவனுக்கு பணம், பதவி, புகழ், அதிர்ஷ்டம் போன்றவை சுக்கிர திசை நடை பெறும் போது தான் கிடைக்குமா?

சுக்கிரன் என்றால் யார்? என்ற தேடல் நிறைய தகவல்களை தந்தது.

சுக்கிரன் என்பவர் நவகிரகங்களில் ஒருவர். வெள்ளி என்ற பெயரிலும் இவரை அழைப்பார்கள்.

நாம் வசிக்கும் பூமியின் அருகில் அமைந்து பூமியை பார்க்கும் நவக்கிரகங்களில் ஒருவர் சுக்கிரன் ஆவார்.

நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் அள்ளிக் கொடுப்பதால் நவகிரகங்களில் "யோக காரகன்" என சுக்கிரனை அழைப்பார்கள்.

சுக்கிரன் அசுரர்களின் குல குருவாக போற்றப்படுபவர். ஆச்சாரியார் என்றால் குரு என பொருள் படும்.

அசுரர்களின் குல குரு என்பதால் சுக்கிரனை "சுக்கிராச்சாரியார்" என்ற பெயரில் அழைப்பார்கள்.

வாழ்விற்கு தேவையான அத்தனை சந்தோஷங்களையும் தரக்கூடியவர் சுக்கிரன்.

ஜாதகத்தில் வாழ்க்கைத் துணையை பற்றிக் கூறும் கிரகம் என்பதால் களத்திர காரகன் என்றும் சுக்கிரனை அழைப்பார்கள்.

நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு இல்லாமல் எப்போதும் இளமையாய் இருக்கும் வல்லமையினை தரும் அமிர்தத்தை பெற வேண்டி தேவர்கள் பிரம்ம தேவரிடம் ஆலோசனை கேட்கின்றனர்.

ஆதிசேஷன் எனும் நாகத்தை மெத்தையாக்கி அனந்த சயன மூர்த்தியாக ஆதி நாராயணர் பள்ளி கொண்டிருக்கும் திருப்பாற்கடலை கடைந்தால் அமிர்தம் கிடைக்கும் என தேவர்களிடம் ஆலோசனை கூறுகிறார் பிரம்மதேவர்.

சவாலும், கடினமும் ஆன அமிர்தம் கடையும் செயலுக்கு அசுரர்களை உதவிக்கு அழைக்கின்றனர் தேவர்கள்.

திருப்பாற்கடலை ஆழியாக்கி, கூர்ம நாராயண மூர்த்தி மேல் மந்தர மலையை மத்தாக அமர்த்தி, வாசுகி எனும் பாம்பினை கயிறாக கொண்டு,சந்திரனை சில்லாக பயன்படுத்தி அசுரர்கள் வாசுகி பாம்பின் தலைபகுதியை பிடித்து கொள்ள தேவர்கள் வாசுகி பாம்பின் வால் பகுதியை பிடித்து அமிர்தம் கடைய துவங்கினர்.

சவாலும், ஆபத்தும் நிறைந்த வாசுகி பாம்பின் தலைப்பகுதியில் நின்று அசுரர்கள் கடைந்திருந்தாலும் மோகினியாக அவதாரம் எடுத்த நாராயண பரம்பொருளின் திருவருளால் தேவர்கள் மட்டுமே அமிர்தத்தை பருகினர்.

சுரேஸ்வரன் அய்யாப்பழம்

இதனால் கோபமடைந்த அசுரர்கள் தங்களின் குல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்று தேவர்கள் தங்களுக்கு அமிர்தம் தராமல் ஏமாற்றியதைப் முறையிட்டனர்.

தனது மக்களாகிய அசுரர்களை ஏமாற்றிய தேவர்கள் அனைத்து செல்வ வளங்களையும் இழந்து பூலோகம் சென்று துன்பப்படட்டும் என சுக்கிராச்சாரியார் தேவர்களுக்கு சாபம் அளித்தார்.

சுக்கிராச்சாரியாரின் சாபத்தால் அல்லலுற்ற தேவர்கள் தங்களை காப்பாற்றும் படி வேதங்களை தொகுத்த வேதவியாச மாமுனிவரிடம் சரணடைந்தனர்.

உத்திரவாகினி என அழைக்கப்படும் வட காவிரியில் சென்று நீராடி, கற்பகாம்பிகை சமேத அக்கினீஸ்வரரை வழிபட்டால் தேவர்களுக்கு சுக்கிரனால் வழங்கப்பட்ட சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும் என தேவர்களுக்கு ஆலோசனை வழங்கினார் வியாச முனிவர்.

வியாச மாமுனிவரின் ஆலோசனைப்படி தேவர்களும் கஞ்சனூர் என தற்போது அழைக்கப்படும் அக்னீஸ்வரர் ஆலயத்தில் வந்து சிவ பெருமானை வழிபட்டு சாப விமோசனம் பெற்றனர்.

சுக்கிரன் அளித்த சாபத்தில் இருந்து தேவர்களுக்கு நிவாரணம் வழங்கிய தலம் என்பதால் சுக்கிரனால் ஏற்படும் தோஷ நிவர்த்திக்குரிய தலமாக கஞ்சனூர் அக்கினீஸ்வரர் ஆலயம் ஆனது போற்றப் படுகிறது.

சுக்கிர தோஷ பரிகார தலமாக இருந்தாலும் கஞ்சனூர் அக்கினீஸ்வரர் ஆலயத்தில் சுக்கிரனுக்கு என தனி சன்னதி எதுவும் கிடையாது.

இங்கு சிவனே சுக்கிரனின் வடிவாக காட்சி அளித்து தன்னை வணங்குவோர்களுக்கு அருள் புரிவது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு ஆகும்.

சுக்கிராச்சாரியாரின் சிறப்புகளையும், கருணையையும் மற்றும் சுக்கிராச்சாரியாரின் தலமான கஞ்சனூர் அக்கினீஸ்வரர் ஆலய தல வரலாற்றைப் பற்றிய சுருக்கமான தகவல்களைப் பார்ப்போம்.

நவக்கிரகங்களில் சுக்கிரன் ஆறாவது கிரகம் ஆவார். சுக்கிரன் மிகச் சிறந்த சிவபக்தர். சிவபெருமான் அருளால் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவி மந்திரத்தை கற்றவர்.

நீதி நெறி தவறாத அசுர வேந்தனான மகாபலி, அமர வேந்தன் எனும் தேவேந்திர பதவி வேண்டி அஸ்வமேத யாகம் நடத்துகிறார்.

குள்ள வாமனனாக நாராயணர் அவதாரம் புரிந்து மூன்றடி நிலம் மகாபலியிடம் தானமாக கேட்கிறார். வாமன மூர்த்தியின் சூழ்ச்சியை அறிந்து மகாபலி நீரை வார்த்து தானம் செய்யும் போது கமண்டலத்தில் இருந்து நீர் வெளியேறும் பகுதியில் வண்டாக உருமாறி அடைத்துக் கொள்கிறார் சுக்கராச்சாரியார்.

சிறு குச்சியால் வாமன மூர்த்தி கமண்டலத்தை வண்டாக உருமாறி அடைத்து இருக்கும் சுக்கிராச்சாரியாரின் கண்ணை குத்துகிறார். சுக்கிராச்சாரியாரின் கண் பார்வை பறி போகின்றது.

தன்னை ஆச்சாரியாராக நம்பிய மகாலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார்.

சுக்கிரனாகிய தனக்கு எந்த கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்து வணங்கு பவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற கருணை குணம் கொண்டவர் சுக்கிராச்சாரியார்.

அதனால் தான் கிரகங்களில் சுக்கிரனை சுபர் கிரகம் எனவும் அழைப்பார்கள்.

மூர்த்தி, தலம், விருட்சம் என மூன்று சிறப்புகளையும் ஒருங்கே கொண்ட ஆலயங்கள் ஒரு சிலவே உண்டு.

கஞ்சனூர் அக்கினீஸ்வரர் ஆலயத்தின் மூர்த்தி, தலம், விருட்சம் மிகுந்த சிறப்பு வாய்ந்தவை.

ஒரு சமயம் பிரம்ம தேவர் நடத்திய யாகத்தில் தேவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆஹூதிகளை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்காமல் தனக்கு மட்டுமே சேரும்படி எடுத்துக் கொண்டார் அக்கினி தேவன்.

அக்கினி தேவனின் சுயநலமான இந்த செயலால் பாண்டு ரோகம் என்ற சோகை நோய் அக்கினி தேவனைப் பற்றிக் கொண்டது.

பிரம்ம தேவரிடம் நோய் நீங்க வழி கேட்டார் அக்கினி தேவன்.

கஞ்சனூரில் வீற்றிருந்து அருள் புரியும் சிவ பெருமானை வழிபடும்படி அக்கினி பகவானுக்கு ஆலோசனை வழங்கினார் பிரம்ம தேவர்.

அக்கினி தேவரும் கஞ்சனூர் சிவபெருமானை வழிபட்டு பாண்டு ரோக நோய் நீங்கப் பெற்றார்.

அக்கினி பகவான் வழிபட்டு நோய் நீங்கியதால் இத்தல இறைவன் "அக்கினீஸ்வரர்" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அக்னி பகவான் இந்த தலத்தில் உருவாக்கிய தீர்த்தம் அக்னி தீர்த்தம் என தற்போதும் அழைக்கப்படுகிறது.

அக்னி தேவனின் நோய் காரணமாக பிரம்மா துவங்கிய யாகம் ஆனது தடைபடுகிறது. யாகம் நிறைவு பெறாததால் பிரம்ம தேவரின் படைப்பு தொழில் ஆனது பாதிக்கப் படுகின்றது

தனது படைப்பு தொழில் தடையின்றி நடைபெற பிரம்ம தேவரும் இத்தலத்திற்கு வந்து சிவ பெருமானை நோக்கி தவமிருந்து, அருள் பெற்றார்.

கஞ்சம் என்றால் தாமரையில் இருப்பவர் என்று பொருள்.பிரம்ம தேவர் சிவபெருமானை வணங்கி வழிபட்டு அருள் பெற்ற தலம் என்பதால் இத்தலம் ஆனது தாமரைப் பூவில் அமர்ந்திருக்கும் பிரம்மாவின் பெயரால் கஞ்சனூர் என அழைக்கப்படுகிறது.

பிரம்மா நீராடி சிவபெருமானை வணங்கி வழிபட்டதால் இந்த தலத்தில் ஓடும் காவிரி ஆற்றிற்கு பிரம்ம தீர்த்தம் என்ற பெயரும் உண்டு.

பலா மற்றும் புரசு கஞ்சனூர் ஆலயத்தின் தல விருட்சமாக போற்றப்படுகின்றன.

கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலய தல விருட்சத்தை ஒரு மண்டல காலம் தொடர்ந்து பதினாறு முறை வலம் வந்து வழிபட்டால் பதினாறு வகை பேறினை பெற்று வாழலாம்.

பொதுவாக மூலவர் ஆன ஆண் தெய்வத்தின் சன்னதி வலது புறத்திலும் பெண் தெய்வமான அம்பாளின் சன்னதி இடது புறத்திலும் இருக்கும்.

கஞ்சனூர் ஆலயத்தின் தெய்வ சன்னதிகள் தனி சிறப்பு வாய்ந்தது ஆகும்.

தன்னை தவமிருந்து வழிபட்ட பிரம்மா முன் கஞ்சனூர் தலத்தில் சிவ பெருமான் - பார்வதி தம்பதி சமேதராய் திருமண கோலத்தில் காட்சி அளித்தார்.

திருமணக் கோலத்தில் காட்சியளித்த தலம் என்பதால் இறைவனின் வலது புறத்தில் அம்பாளின் சன்னதி அமைந்துள்ளது.

அம்பாளின் திருநாமம் கற்பாகம்பாள் ஆகும்.

அக்கினீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் சன்னதி நடுவில் முருகப்பெருமானுக்கு தனி சன்னதி உள்ளது. இவ்வாறான முருகப்பெருமான் சன்னதி அபூர்வமாய் ஒரு சில ஆலயங்களில் மட்டுமே காணப்படும்

இவ்வாறு இறைவன் மற்றும் அம்பாள் சன்னதி நடுவில் அமைந்திருக்கும் அபூர்வமான முருகப் பெருமான் சன்னதியை ஸோம ஸ்கந்தர் சன்னதி என அழைப்பார்கள்

மூர்த்தி,தலம்,விருட்சம் என அனைத்து சிறப்புகளையும் ஒருங்கே பெற்று கேட்டவர்களுக்கு கேட்ட வரங்களை கீர்த்தியுடன் அள்ளித் தரும் சுக்கிரனின் அம்சமாய் வீற்றிருக்கும் கஞ்சனூர் அக்கினீஸ்வரரை வாழ்வில் ஒரு முறையேனும் சென்று தரிசித்து அவர் அருளைப் பெற்று வாருங்கள்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா கும்பகோணத்தில் இருந்து கிட்டத்தட்ட 16 கிலோமீட்டர் தொலைவில் காவிரி ஆற்றின் வட திசைக் கரையில் கஞ்சனூர் என்ற கிராமத்தில் அக்கினீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

தொடர்புக்கு-isuresh669@gmail.com

Tags:    

Similar News