சிறப்புக் கட்டுரைகள்

உடல் ஆரோக்கியத்தில் வைட்டமின்களின் பங்கு

Published On 2024-09-07 17:15 GMT   |   Update On 2024-09-07 17:15 GMT
  • மனநோய்களான மனஅழுத்தம், படபடப்பு, மனப்பதற்றம் போன்றவை வராமல் தடுப்பதற்கு முக்கியம்.
  • உடலில் உள்ள எலும்புகள், தசைகள் மற்றும் பற்களை வலுவாக்க உதவுகிறது.
.

வைட்டமின்கள் நம் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு, வளர்சிதை மாற்றங்களுக்கு மிகவும் வேண்டிய ஒன்றுதான். வைட்டமின்களில் இரண்டு வகைகள் உள்ளன. நீரில் கரைவன அல்லது கொழுப்பில் கரைவன. தேவையான அளவு உணவின் மூலம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் அளவு குறைந்தாலும் அல்லது மிகுந்தாலும் நமக்கு நோய்கள் ஏற்படுகின்றன. அதைப்பற்றி இப்பகுதியில் பார்ப்போம். நீரில் கரையும் வைட்டமின்களின் பயன்களும், குறைபாட்டினால் ஏற்படும் சிக்கல்களும்:

வைட்டமின் "பி1" நன்கு தீட்டப்பட்ட அரிசியில் தையமின் அளவு குறைவாக இருப்பதால், அரிசி உணவு அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு "பி1" குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் பசியின்மை, எடைக்குறைவு, மனக்குழப்பம், நினைவுமறதி போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக மதுப்பழக்கம் உள்ளவர்களுக்குத் தசைகளில் பலவீனம், கண் தொடர்புள்ள நோய்கள் மற்றும் நரம்பு மண்டலத்தில் இடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகமுள்ள உணவுப் பொருட்கள்: தானியங்கள், அசைவ உணவுகள், பீன்ஸ், உலர்ந்தக் கொட்டைகள்.

வைட்டமின் "பி2" (B 2) நமக்கு நாளும் தேவைப்படும் வைட்டமின்களில் முதன்மையானது. இதை உடல் சேமித்து வைத்துக் கொள்ளமுடியாது. நாளும் உணவில் இதை எடுத்து கொள்ளத்தான் வேண்டும். இவை தாம் ஆற்றல் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கின்றன. அதனால் அவசியமான ஊட்டச்சத்தில் இதன் பங்கு இன்றியமையாதது. உடலில் கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுவதில் ரைபோபிளேவின் சிறந்த பங்கு வகிக்கிறது.

உடலில் புரதங்கள் உருவாக்குவதோடு தொடர்புக் கொண்டவை என்பதால் உடலின் இயல்பான வளர்ச்சிக்கு உதவுகிறது. இது தைராய்டு செயல்பாட்டையும் சீர்செய்கிறது. இனப்பெருக்க உறுப்புகளின் சரியான வளர்ச்சிக்கு இது உதவுகிறது.

உடலில் தோல், திசு, கண்கள், சவ்வு, நரம்பு மண்டலம் மற்றும் நோய் எதிர்ப்புமண்டலம் போன்றவற்றின் திசு வளர்ச்சியை உறுதி செய்ய உதவுகிறது. நலமான சருமத்துக்கும், நகங்களின் வலுவுக்கும், வலுவான கூந்தலுக்கும் கூட உதவுகிறது. காயங்களை மீட்டுத் தோலைப் பாதுகாப்பதிலும் சிறந்த பங்கு வகிக்கிறது. கண்புரை வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

அதிகமுள்ள உணவுப் பொருட்கள் - பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், முட்டை, மீன், காளான் வைட்டமின் "பி3" தோல் பாதிப்புகளில் இருந்தும், செரிமான கோளாறுகளில் இருந்தும் காக்கிறது. நாளும் நமக்கு 14-17மிகி போதுமனாது. அளவிற்கு அதிகமாக எடுக்கும்போது கல்லீரல் இடர் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதன் குறைபாட்டால் பெல்லங்ரா (Pellegra) ஏற்படுகிறது. இதனால் வயிற்றுப் போக்கு, நினைவுமறதி, தோல் ஒவ்வாவை போன்றவை ஏற்படுகின்றன. அதிகமுள்ள உணவுப் பொருட்கள்: அசைவ உணவுகள், மீன், முட்டை மற்றும் காய்கறிகள்.

வைட்டமின் "பி6" இது இதயம்,தோல் மற்றும் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ஹார்மோன்களைச் சீராகச் செயல்பட வைக்கிறது மற்றும் அறிவாற்றலை அதிகரிக்கிறது. இதன் குறைபாடு இருக்கும் போது உடல் சோர்வு, பசியின்மை, வறண்ட சருமத்தின் தோற்றம், முடிஉதிர்தல், உதடுகளைச் சுற்றி விரிசல், தூக்க மின்மை, வாய் மற்றும் நாக்குப் பகுதியில் வீக்கம் உண்டாகலாம்.

அதிகமுள்ள உணவுப் பொருட்கள்: முழு தானியங்கள், பருப்புவகை, முட்டை, மீன், இறைச்சி, வாழைப்பழங்கள், காலிப்ளவர், முட்டைகோஸ், சோயாபீன்ஸ், கேரட் மற்றும் கீரைகள்.

வைட்டமின் "பி12" (B12) மிகவும் சக்தி வாய்ந்த, நீரில் கரையும் ''பி''-காம்ளக்ஸ் வைட்டமின் ஆகும். இதைச்சயனோ கோபாலமைன் என்றும் கூறலாம். இது நம் உடலின் ஆற்றல் மையமாகச் செயல்படுகிறது. நம் உடல் வைட்டமின் "பி12"-ஐ தானாகத் தயாரிக்க முடியாது. எனவே தினமும் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

குழந்தைகளின் மூளை வளர்ச்சியைத் தூண்டுவதற்கு முக்கியம். மூளை மற்றும் நரம்புகளைச் சுற்றி உள்ள மைலின் உருவாக்கத்திற்கும் செயல்பாட்டிற்கும் முக்கியம். மூளையில் உள்ள வேதியியல் பொருட்களின் தயாரிப்புக்கு முக்கியம்.

ரத்தச் சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கு முக்கியம். நம் அணுக்களில் உள்ள டி.என்.ஏ.வின் உருவாக்கத்திற்கு முக்கியம். ஞாபக மறதிநோய் வராமல் தடுப்பதற்கு முக்கியம்.

ரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியம். மனநோய்களான மனஅழுத்தம், படபடப்பு, மனப்பதற்றம் போன்றவை வராமல் தடுப்பதற்கு முக்கியம். பிறவியில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுக்கிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

வயது மூத்தோருக்கு வரும் கண் குறைபாடுகளைத் தடுக்கிறது. இதய நலனுக்கு உதவுகிறது. நகம், தோல், கண்களின் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மூட்டுகளைச் சுற்றியுள்ள சவ்வுகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியம் தேவைப்படுகிறது.

வைட்டமின்கள் அதிகமுள்ள உணவுப் பொருட்கள்: அசைவ உணவுகள் - முட்டை, மீன் மற்றும் கோழி, ஈரல் மற்றும் சிவப்பு மாமிசம்.

சைவ உணவுகள் - வலு ஊட்டப்பட்ட தானியங்கள், பால் பொருட்கள், சோயா, பாதாம் உள்ளிட்டவைகளில் அதிக அளவில் வைட்டமின் "பி12"உள்ளது.

வைட்டமின் "பி9" ரத்த உற்பத்திக்கு மிகவும் அவசியமான வைட்டமின். இதன் குறைபாட்டால் ரத்தச் சோகை, பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறவி குறைபாடு, வாய்ப்புண், தலைவலி, பசியின்மை, அதிகக் கோபம், மனக்கட்டுப்பாடின்மை ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. உடலால் இதைச் சேமித்து வைக்க முடியாது. நாளும் உணவில் இதைச் சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமுள்ள உணவுப் பொருட்கள்: புரக்கோலி, விதைகள் மற்றும் கொட்டைகள், அசைவ உணவு, அவகேடோ, சோயா, வாழைப்பழம், தக்காளி, பப்பாளி, சிட்ரஸ் பழங்கள், வெண்டைக்காய், காலிபிளவர், பீட்ரூட், கேரட், கீரைகள்

வைட்டமின் "சி" இது உடலில் உள்ள எலும்புகள், தசைகள் மற்றும் பற்களை வலுவாக்க உதவுகிறது. புரதத்துடன் இணைந்து நம் உடலின் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமித் தொற்றுகளிடமிருந்து காக்கிறது.

உணவில் இருந்து இரும்புச்சத்தை உறிஞ்சவும், கால்சியம் எலும்புகளுக்குச் சென்றடையவும் இது வேண்டும். ஸ்கர்வி என்னும் நோய் இதன் குறைபாட்டால் வருகிறது. இதனால் எலும்புகளும் தசைகளும் வலுவிழந்துவிடும்.

அதிகமுள்ள உணவுப் பொருட்கள்: நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், குடைமிளகாய், கீரைகள், பிரக்கோலி, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, காலிப்ளவர், முட்டைகோஸ், அன்னாசிப்பழம், கிவி பழம், மாம்பழம், கொய்யாப்பழம். இந்த பழங்களில் வைட்டமின் "சி" இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத

அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் "சி" மிக அதிகமாக உள்ளது. மேலும் இதில் கால்சியம், புரதம் போன்ற சத்துக்கள் இருப்பதால் வைரஸ் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. எலும்புகளின் உறுதிக்கும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும், தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும், ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பதற்கும் உதவுகிறது. எனவே நாம் உண்ணும் உணவில் மேற்கூறியவற்றை தினமும் எடுத்துக்கொள்ளும்போது வைட்டமின்கள் குறைபாடு ஏற்படுவதைத் தவிர்க்கலாம், மகிழ்ச்சியாக வாழலாம்.

போன்: 75980-01010, 80564-01010.

Tags:    

Similar News