சிறப்புக் கட்டுரைகள்

மீனா மலரும் நினைவுகள்... மிரட்டிய ஆற்று வெள்ளம்

Published On 2024-07-22 11:00 GMT   |   Update On 2024-07-22 11:01 GMT
  • செயற்கை மழைக்காக காத்திருந்த எங்களை இயற்கை மழையே மகிழ்வித்தது.
  • ரோட்டின் குறுக்கே மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.

நான் நிறைமாத கர்ப்பிணி (படத்தில் தான்)!

திடீரென்று பிரசவ வேதனை ஏற்படும். அவசர அவசரமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டும். முரளி மாட்டு வண்டியை தயார் செய்வார். அந்த நேரத்தில் திடீரென்று மழையும் கொட்டும்.

இதுதான் காட்சி. இப்படி 'வெற்றிக் கொடி கட்டு' படத்தின் காட்சியை டைரக்டர் சேரன் விளக்கியதும் ஒத்திகை தொடங்கியது. அச்சு அசலாக இடுப்பில் கையை வைத்துக் கொண்டு வலியால் துடிக்கும் கர்ப்பிணி போலவே நடந்தேன். நடித்தேன் முழுக்க முழுக்க இரவு எபெக்டில் படமாக்கப்பட்டது. வண்டிக்கு செல்வதற்கு முன் மழை பெய்ய வேண்டுமே...! அதற்காக ஏற்கனவே இரண்டு லாரிகளில் தண்ணீர் கொண்டு தயாராக வைத்திருந்தார்கள்.

மோட்டார் மூலம் மழை பெய்வது போன்று தண்ணீரை மழை சிதறல் போல் சிதற விட்டார்கள். அதில் நனைந்தபடியே நடித்தோம். ஒரு சில திருத்தங்களுடன் டைரக்டர் சொன்னது போல் நாங்கள் நடித்து விட்டதால் அவருக்கு நல்ல திருப்தி.

ஓ.கே. ஷாட் போயிடலாம் என்றார். நாங்களும் தயாரானோம். டிராலியில் கேமரா முதல் எல்லாம் ரெடியாகி விட்டது. படப்பிடிப்பு தொடங்கியது பாதி சீன் எடுத்து முடிந்ததும் லாரியில் தண்ணீர் இல்லை என்ற விசயம் தெரிய வந்தது. அந்த சீனை இடையில் விட முடியாமலும், தொடர்ந்து ஷீட் பண்ணுவது எப்படி என்று தெரியாமலும் தவித்தோம்.

ஒத்திகையின் போதே பெருமளவு தண்ணீர் காலியாகி இருக்கிறது. இனி தண்ணீருக்கு என்ன செய்வது? மீண்டும் லாரி தண்ணீரை வரவழைப்பது என்றால் ஒரு மணி நேரத்திற்கு மேலாகி விடும். எனவே படக்குழுவினர் செய்வதறியாமல் திகைத்து கொண்டிருந்தார்கள்.


ஒரு நாள் ஷூட்டிங் தடைபட்டால் எத்தனை பேருக்கு என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

நாங்கள் பட்ட கஷ்டத்தை வருண பகவான் பார்த்தாரோ என்னவோ என்ன ஆச்சரியம்... பாருங்கள் வானத்தில் கருமேகம் சூழவில்லை. ஆனால் திடீரென்று எதிர்பாராமல் இடி இடித்தது. அடுத்த சில வினாடிகளில் மழையும் கொட்டியது.

செயற்கை மழைக்காக காத்திருந்த எங்களை இயற்கை மழையே மகிழ்வித்தது.

செயற்கை மழை என்றால் கேமராவில் தண்ணீர் படாதவாறு படம் பிடிக்க முடியும். இயற்கையாக பெய்யும் மழை அப்படியெல்லாம் விட்டு வைக்காதே! எனவே தண்ணீர் பட்டு விடாமல் கேமராவை, துணியால் மூடி பாதுகாப்பாக ஷாட்டை எடுத்தார்கள். நிஜ மழையில் காட்சியும் தத்ரூபமாக அமைந்தது. படப்பிடிப்பு முடிந்து உடைமாற்றி விட்டு காரில் ஏறி தங்கு மிடத்துக்கு புறப்பட்டோம். கார் கண்ணாடியை திறந்து வெளியே பார்க்க முடிய வில்லை. அவ்வளவு மழை கொட்டி கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றதும் ரோட்டின் குறுக்கே மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அது ஒரு தரைப்பாலமாக இருந்துள்ளது. கார் அந்த தண்ணீருக்குள் இறங்குவது ஆபத்தானது என்று தயங்கினார் கார் டிரைவர். தண்ணீரை கடந்து மறுகரைக்கு செல்வது எப்படி என்று தெரியாமல் நடு வழியில் நின்று கொண்டிருந்தோம். இந்த காலத்தை போல் செல்போன் வசதி இருந்திருந்தால் உதவிக்கு யாரை யாவது அழைத்து இருக்க முடியும். எந்த வசதியும் இல்லாத காலத்தில் இப்படித்தானே தவிக்க நேரிடும்.

சிறிது நேரம் கழித்து டைரக்டர் சேரன் மற்றும் படக்குழுவை சேர்ந்தவர்கள் வந்தார்கள். நடுவழியில் தவித்து கொண்டிருந்த எங்களை பார்த்ததும் சேரனின் ஐடியாப்படி படக்குழுவை சேர்ந்த பெரிய வேனில் ஏற்றி எங்களை அனுப்பினார். மெதுவாக அந்த வாகனத்தின் மூலம் தண்ணீரை கடந்தோம்.

அதன் பிறகு 'மா அன்னய்யா' (வானத்தைப்போல தமிழ் படத்தின் தெலுங்கு ரீமேக் என்ற படத்தின் பாடல் காட்சியில் நடிப்பதற்காக ஆஸ்திரியா புறப்பட்டு சென்றோம். இந்த மாதிரி பாடல் காட்சிகளை மட்டும் படமாக்குவதற்கு டைரக்டர் வர மாட்டார். உதவி டைரக்டர், ஒளிப்பதிவாளர் மற்றும் உதவியாளர்கள் மட்டுமே செல்வோம். அப்படித்தான் ஆஸ்திரியாவுக்கும் சென்றிருந்தோம்.

ஆஸ்திரியா மலைகளால் சூழப்பட்டு இயற்கை எழில் சூழ்ந்த சிறிய நாடு. இதன் இயற்கை அமைப்புகள் கேமரா கண்களுக்கு விருந்தளிக்கும். எனவேதான் வெளிநாடுகளில் படப்பிடிப்புக்கு இடம் தேடுபவர்கள் ஆஸ்திரியாவையும் நிச்சயமாக கவனத்தில் கொள்வார்கள். இன்ஸ்புருக் நகரில் தங்கியிருந்தோம்.

தினமும் காலை 7.30 மணிக்கு ஷீட்டிங்குக்கு தயாராக வந்து விட வேண்டும் என்பாார்கள். ஏற்கனவே நேர மாறுபாடு காரணமாக தூக்கம் சரியாக கிடையாது. நமக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையே 6 மணி நேரம் வித்தியாசம். அப்படியிருந்தும் காலை 7 மணிக்குள் ரெடியாகி 7.30 மணிக்கெல்லாம் சென்று விடுவேன். ஆனால் ஷாட் எடுப்பதற்கு தாமதம் ஆகும். தினமும் இப்படி தாமதித்ததால் அம்மா கோபம் வந்து சத்தம் போட்டார்கள். இதற்கிடையில் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு செல்ல விசா வாங்க வேண்டும். அதற்காக நானே இந்திய தூதரகத்துக்கு சென்று வாங்க வேண்டியிருந்தது. இப்படிபல சிரமங்களுக்கு இடையே ஆஸ்திரியா ஷூட்டிங்கை அவஸ்தைப்பட்டு முடித்து கொண்டு கிளம்பி வந்தோம். அடுத்து எங்கே ...? என்ன...? அடுத்த வாரம் வரை சஸ்பென்ஸ்!

(தொடரும்...)

Tags:    

Similar News