செய்திகள் (Tamil News)

சுவிட்சர்லாந்து வீரர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை தொடங்கியது பிபா

Published On 2018-06-24 11:20 GMT   |   Update On 2018-06-24 11:20 GMT
அல்பேனியா கொடியின் சின்னத்தை காட்டியதற்கான குற்றச்சாட்டில் சுவிட்சர்லாந்து வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை தொடங்கியுள்ளது பிபா. #WorldCup2018
பிபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில் விளையாடும் வீரர்கள் மற்றும் போட்டியை பார்க்க வரும் ரசிகர்கள் அரசியல் மற்றும் பிறர் மனதை புண்படுத்தும் வகையிலான செய்திகளை வெளிப்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மீறி செயல்பட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும். ரசிகர்கள் தவறு செய்தால் அந்தந்த கால்பந்து சங்கத்திற்கு அபராதம் விதிக்கப்படும். நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள செர்பியா - சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து கடைசி நேரத்தில் 2-1 என வெற்றி பெற்றது.



இந்த வெற்றியை சுவிட்சர்லாந்து வீரர்கள் கிரானிட் ஜகா, ஜெர்டான் ஷகிரி ஆகியோர் அல்பேனியா கொடியில் உள்ள லோகோவை பிரதிபலிக்கும் வகையில் செய்கை காட்டி கொண்டாடினார்கள். இதுகுறித்து புகார் செய்யப்பட்டது. இதனால் பிபா ஒழுங்கு நடவடிக்கைக் குழு இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணையை தொடங்கியுள்ளது. அதேபோல் செர்பியா ரசிகர்கள் அரசியல் மற்றும் பிறரை தாக்கும் வகையிலான தகவலை வெளிப்படுத்தினார்கள். இதுகுறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.

செனகலுக்கு எதிரான போட்டியின்போது போலந்து ரசிகர்கள் அரசியல் தொடர்கான பேனர் வைத்திருந்ததால் போலந்து கால்பந்து பெடரேசனுக்கு பிபா 10 ஆயிரத்து 100 அமெரிக்கா டாலர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News