செய்திகள்

மராட்டிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்

Published On 2018-12-31 04:36 GMT   |   Update On 2018-12-31 04:36 GMT
புனேவில் இன்று தொடங்கும் மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்திய இளம் வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தனது முதல் சுற்றில் அமெரிக்காவின் மைக்கேல் மோவை சந்திக்கிறார். #MaharashtraOpentennis
புனே:

மொத்தம் ரூ.3½ கோடி பரிசுத்தொகைக்கான மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று தொடங்கி 5-ந்தேதி வரை புனேயில் நடக்கிறது. தெற்காசியாவில் நடக்கும் ஒரே ஏ.டி.பி. தொடரான இந்த போட்டி முன்பு சென்னையில் நடந்தது. நிதி உள்ளிட்ட பிரச்சினைகளால் புனேக்கு மாற்றப்பட்டு அங்கு 2-வது ஆண்டாக நடத்தப்படுகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன், நடப்பு சாம்பியனான பிரான்ஸ் வீரர் ஜிலெஸ் சிமோன், தென்கொரியாவின் ஹியோன் சங் ஆகியோர் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்குகிறார்கள்.

இந்திய இளம் வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தனது முதல் சுற்றில் அமெரிக்காவின் மைக்கேல் மோவை இன்று சந்திக்கிறார். ராம்குமார், சகெத் மைனெனி, அர்ஜூன் காதே ஆகிய இந்தியர்களும் ஒற்றையர் பிரிவில் ஆடுகிறார்கள்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போண்ணா- திவிஜ் சரண், லியாண்டர் பெயஸ் (இந்தியா)- மிக்யூல் ஏஞ்சல் ரியேஸ் (மெக்சிகோ) ஆகிய ஜோடிகள் மீது எதிர்பார்ப்பு உள்ளது. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. முன்னதாக பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஸ்பெயினின் கரோலினா மரின், நடிகை டாப்சி மற்றும் வீரர்கள் கலந்து கொள்ளும் கண்காட்சி போட்டியும் நடக்கிறது. #MaharashtraOpentennis
Tags:    

Similar News