பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்வி அடையும்- ரிக்கி பாண்டிங் கணிப்பு
- ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.
- முகமது ஷமி இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவு என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இழந்தது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அதோடு இந்த தொடரின் மோசமான தோல்வி காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பும் தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3 அல்லது 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும்.
இந்நிலையில், 'பார்டர் கவாஸ்கர்' டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றக் கூடும் என அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய ரிக்கி பாண்டிங், "பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் எதாவது ஒரு போட்டியில் இந்தியா வெற்றி பெரும் என்று நான் நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணில் தோற்கடிப்பது சவாலான விஷயம். எனவே 3-1 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றும் என்று கருதுகிறேன். இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டியில் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். முகமது ஷமி இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாகும்" என்று தெரிவித்தார்.
முகமது ஷமி இல்லாத நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் மற்றும் இளம் வீரர்கள் பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் இந்தியா விளையாடிய தனது கடைசி இரண்டு பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர்களையும் இந்தியா வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.