யுவராஜ் 6 சிக்சர் விளாசிய மைதானத்தில் விளையாட இருப்பது கனவு போல் உள்ளது- அபிஷேக் ஷர்மா
- 2007-ம் ஆண்டு யுவராஜ்சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசியது என்னை வெகுவாக கவர்ந்தது.
- இந்த மைதானத்திற்கு வந்ததும், எந்த முனையில் இருந்து அவர் 6 சிக்சரை விரட்டினார் என்பதை கண்டுபிடிக்க முயற்சித்தேன்.
டர்பன்:
தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நாளை இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடக்கிறது.
இந்த போட்டிக்கு தயாராகும் இந்திய தொடக்க ஆட்டக்காரான பஞ்சாப்பை சேர்ந்த அபிஷேக் ஷர்மா, இதே டர்பன் மைதானத்தில் 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் போது இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் யுவராஜ்சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். 24 வயதான அபிஷேக் ஷர்மாவுக்கு, யுவராஜ்சிங் ஆலோசகராக உள்ளார்.
அபிஷேக் ஷர்மா கூறுகையில், 'டர்பன் மைதானத்தை இதற்கு முன்பு டி.வி.யில் தான் பார்த்துள்ளேன். அதே மைதானத்தில் இப்போது நான் இருப்பது கனவு நனவானது போல் உள்ளது. 2007-ம் ஆண்டு யுவராஜ்சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசியது என்னை வெகுவாக கவர்ந்தது. முதல் நாள் இந்த மைதானத்திற்கு வந்ததும், எந்த முனையில் இருந்து அவர் 6 சிக்சரை விரட்டினார் என்பதை கண்டுபிடிக்க முயற்சித்தேன். அவர் மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர்களை தெறிக்க விட்டது மறக்க முடியாத ஒன்று.
அந்த ஆட்டத்தை நான் எனது குடும்பத்தினருடன் டி.வி.யில் பார்த்ததும், வெற்றி பெற்றதும் வீட்டுக்கு வெளியில் வந்து கொண்டாடியதும் இன்னும் நினைவில் உள்ளது. இப்போது அதே இடத்தில் நான் விளையாட இருப்பதை நிச்சயம் யுவராஜ்சிங் பார்ப்பார். அவருக்கு சொல்ல விரும்பும் தகவல், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அவரை பெருமையடையச் செய்வேன்' என்றார்.