பூனைக்கு முடிவெட்ட ரூ.55 ஆயிரம்.. வாசிம் அக்ரமின் சுவாரஸ்ய தகவல்- வைரலாகும் வீடியோ
- எனக்கு முடிவெட்டுவதற்கு கூட இவ்வளவு செலவு செய்ததில்லை.
- இந்தப் பணத்தில் பாகிஸ்தானில் 200 பூனைகளை வாங்கி வளர்த்து விடலாம் என்றார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் வாசிம் அக்ரம். ஒருநாள் போட்டிகளில் 500 விக்கெட் எடுத்த முதல் வீரர் போன்ற பல சாதனைகளை படைத்துள்ளார்.
ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் ஒருநாள் போட்டி வர்ணனையின் போது தனது பூனை குறித்த சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஆஸ்திரேலியாவில் எனது பூனைக்கு முடிவெட்ட ஒரு கடைக்கு சென்றேன். முதலில் மயக்க மருந்து கொடுத்தனர். பிறகு உணவு கொடுத்தனர். இதற்காக பாகிஸ்தான் பணம் ரூ. 1.83 லட்சம் (இந்திய மதிப்பில் ரூ. 55,000) செலுத்த வேண்டியது இருந்தது. எனக்கு முடிவெட்டுவதற்கு கூட இவ்வளவு செலவு செய்ததில்லை. இந்தப் பணத்தில் பாகிஸ்தானில் 200 பூனைகளை வாங்கி வளர்த்து விடலாம் என்றார்.
இதைக் கேட்ட சக வர்ணனையாளர்கள் நம்ப முடியாமல் வியந்தனர். உடனே பணம் செலுத்தியற்கான ரசீதை காண்பித்தார். அதில்,' பூனையின் மருத்துவ பரிசோதனை (ரூ. 20,000), மயக்க மருந்து செலவு (ரூ. 56,000), இருதய துடிப்பு சோதனை (ரூ. 46,000) என, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக செலவு குறிப்பிடப்பட்டு இருந்தது. முடி வெட்டுவதற்கு ரூ. 7,300 மட்டும் தான் செலவு என இருந்தது. இதைப் பார்த்து சிரித்து மகிழ்ந்தனர்.