பயிற்சிக்கு அழைப்பு விடுத்த டோனி.. 17 வயது வீரரை டார்கெட் செய்யும் சிஎஸ்கே
- இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆயுஷ் மத்ரே தனது கிரிக்கெட் கரியரை தொடங்கி உள்ளார்.
- அபாரமான பேட்டிங் திறமையால் ஆயுஷ் மத்ரே, டோனியின் மனம் கவர்ந்த வீரராக மாறியுள்ளார்.
அடுத்த ஆண்டு தொடங்க உள்ள ஐபிஎல் சீசனுக்கு பயங்கர எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. இந்த மாத இறுதியில் சவுதி அரேபியாவில் வைத்து மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த முறை மெகா ஏலம் மிகுந்த சுவாரஸ்யம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அணியும் எந்த மாதிரியான வீரர்களை தங்கள் பக்கம் இழுக்கலாம் என திட்டம் தீட்டி வருகின்றன.
அந்த வகையில், மும்பையை சேர்ந்த இளம் பேட்ஸ்மேன் ஒருவர் அனைத்து ஐபிஎல் அணிகளின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த ஆயுஷ் மத்ரே, தனது அபாரமான பேட்டிங் திறமையால் டோனியின் மனம் கவர்ந்த வீரராக மாறியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆயுஷ் மத்ரே தனது கிரிக்கெட் கரியரை தொடங்கி உள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் தனது முதல் 5 ஆட்டங்களில் 321 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். தொடர்ந்து ரஞ்சி கோப்பை தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 176 ரன்கள் விளாசி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.
தொடர்ந்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ஆயுஷ் மத்ரே, சென்னை அணி சார்பில் பயிற்சி போட்டிகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், மின்னஞ்சல் மூலம் மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் ஆயுஷ் மத்ரேவை பயிற்சி ஆட்டங்களில் விளையாட அனுமதிக்குமாறு கேட்டு உள்ளார்.
இரண்டாவது கட்ட ரஞ்சி கோப்பை தொடர் மற்றும் சையது முஸ்தாக் அலி தொடர் தொடங்குவதற்கு முன்பாக சென்னையில் ஆயுஷ் மத்ரே சில நாட்கள் டோனியின் மேற்பார்வையின் கீழ் பயிற்சி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வரும் ஐபிஎல் மெகா ஏலத்திலும் ஆயுஷ் மத்ரேவை தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்ய சென்னை அணி முயற்சிக்கும்.
இது குறித்து பேசிய சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், சென்னையில் பயிற்சி ஆட்டங்களில் கலந்து கொள்ள ஆயுஷ் மத்ரேவுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் அனுமதி அளித்துள்ளது. சென்னை அணியில் பல இளம் வீரர்களுக்கு டோனி பயிற்சி அளித்து வருகிறார்.