செய்திகள் (Tamil News)

மத்திய அரசு பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது: முத்தரசன்

Published On 2018-02-02 03:59 GMT   |   Update On 2018-02-02 03:59 GMT
மத்திய அரசின் கடைசி பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்று சீர்காழியில் நடைபெற்ற மாநாட்டில் முத்தரசன் பேசினார்.
சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 23-வது மாவட்ட மாநாடு நடை பெற்றது. இதில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண் டார்.

இதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் கடைசி பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. கருப்பு பணத்தை மீட்போம் அனைவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது.

அது போல் விவசாயத்தை வரும் 2022 -ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவோம் என அறிவித்துள்ளனர். கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் விவசாய வருமானத்தை இரட்டிப்பு ஆக்கும் என்ற வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாமல் மத்திய அரசு உள்ளது. கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை அடுத்த தேர்தல் வந்து அதில் வெற்றி பெற்றால் நிறைவேற்றுவோம் என கூறியிருப்பது விவசாயிகளை ஏமாற்றுகின்ற வஞ்சிக்கின்ற அறிவிப்பாக உள்ளது.

இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏதேனும் சலுகைகள் வழங்கப்படும் என்று காத்திருந்த நிலையில் எதுவும் இல்லாதது ஏமாற்றமே. விவசாயிகளின் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க போராடி வரும் சூழலில் விலையை மத்திய அரசு விலை நிர்ணயம் செய்யும் என்ற அறிவிப்பால் எதுவும் நடந்துவிடாது.

வழக்கம் போல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 5 சதவீத வரி விலக்கு அளித்து அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளனர். மொத்ததில் மத்திய அரசின் இன்றைய பட்ஜெட் அறிக்கை என்பது மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

Similar News