செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் வெளுத்து கட்டிய கோடை மழை

Published On 2018-05-22 09:34 GMT   |   Update On 2018-05-22 09:34 GMT
ஈரோட்டில் கோடை வெயில் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த நிலையில், நேற்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சில் உள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து மக்களையும், விவசாயிகளையும் மகிழ்வித்து வருகிறது.

பகலில் கோடை வெயில் சுட்டெரித்தாலும் மாலை 5 மணிக்கு மேல் மேகக் கூட்டங்கள் சூழ்ந்து வெயிலை விரட்டியடித்து விட்டு மழை பெய்த வருகிறது. நேற்றும் பகலில் வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருந்தாலும் மாலையில் அந்த வெயில் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

மாலை 6 மணிக்கு மேல் ஈரோடு மாவட்டம் முழுவதும் லேசாக பெய்யத் தொடங்கிய மழை இரவில் வெளுத்து வாங்கியது. கடும் சூறைக்காற்றுடன் பலத்த இடி-மின்னலுடன் பொது மக்களை பயமுறுத்தியபடி இந்த மழை பெய்தது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான மொடச்சூர், பாரியூர், கொளப்பலூர், ஒத்தக்குதிரை, கரட்டடிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இரவு 8.15 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை 9.45 மணி வரை கொட்டி தீர்த்தது.

கோபி பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 71 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதே சமயம் கோபியில் சூறைக்காற்று வீசவில்லை. இடி-மின்னலுடன் மழை கொட்டியது.

ஈரோட்டில் நேற்று இரவு 7 மணிக்கு மேல் சுழட்டி... சுழட்டி... காற்று அடித்து கன மழை பெய்தது. பலத்த காற்றால் பன்னீர்செல்வம் பார்க், மேட்டூர் ரோடு, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, கொல்லம்பாளையம் ரவுண்டானா, கரூர் பைபாஸ் ரோடு உள்பட முக்கிய இடங்களில் உள்ள விளம்பர பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் என எதையும் காற்று விட்டு வைக்கவில்லை. அனைத்தும் தூக்கி வீசப்பட்டன.

ஈரோடு கருங்கல்பாளையம், அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, மேட்டூர் ரோட்டில் உள்ள பெரிய பெரிய விளம்பர பேனர்கள் காற்றில் பறந்து உயரழுத்த மின் பாதை கம்பியில் விழுந்தன. இதனால் ஈரோடு நகரம் முழுவதும் மின் தடை ஏற்பட்டது.

பொதுமக்கள் பலர் தங்கள் தூக்கத்தை இழந்தனர். பல இடங்களில் மின்சாரம் விட்டு விட்டு வந்தது. ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்த பழமையான மரம் முறிந்து விழுந்தது.

ஈரோடு சி.எம்.சி. கல்லூரி மைதானத்தில் பலத்த காற்றுக்கு ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. பெருந்துறை ரோடு குமலன்குட்டையில் ஒரு மரம் முறிந்து கார் மீது விழுந்தது. இதில் கார் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 2 மரங்கள் முறிந்து விழுந்தன.

கலெக்டர் அலுவலகம் அருகில் ஒரு மரம் முறிந்து விழுந்தது. சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஓ. காலனி, கொல்லம் பாளையம், வாய்க்கால் மேடு, ஆனைக்கல்பாளையம் உள்பட ஈரோடு நகர பகுதிகளில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தன.

மேலும் ஈரோட்டில் கொல்லம்பாளையம் ரவுண்டானா பகுதியில் 5-க்கும் மேற்பட்ட டெலிபோன்கம் பங்கள் சாய்ந்தன. இதனால் டெலிபோன் கம்பிகள் தாழ்வாக தொங்கி கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த வாகனங்கள் மின்கம்பி தொங்கியதால் மெதுவாக ஊர்ந்து வந்தன.

கொல்லம்பாளையத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் பெரிய கம்பால் தொங்கிய மின் கம்பிகளை உயரே தூக்கி பிடித்து வாகனங்களுக்கு உதவி செய்தனர். இதே போல் மின் கம்பங்களும் சாய்ந்தன.

மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்த இடங்களில் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். விடிய விடிய ரோட்டில் முறிந்து விழுந்த மரங்களை ஊழியர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர். ஈரோடு நகரில் 54 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

சத்தியமங்கலம், பவானிசாகர், பெருந்துறை, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை, அரச்சலூர், கொடுமுடி உள்பட ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று இரவு கோடை மழை கொட்டி தீர்த்தது.
Tags:    

Similar News