செய்திகள் (Tamil News)

வேலூர்-திருவண்ணாமலை மாவட்டத்தில் சூறை காற்றுடன் பலத்த மழை: 2 பேர் பலி

Published On 2018-06-03 14:45 GMT   |   Update On 2018-06-03 14:45 GMT
வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் நேற்று மாலை சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. வேலூர், ஆற்காடு, அரக்கோணம், ஆலங்காயம், குடியாத்தம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டையில் இடி, மின்னலுடன் பெய்த மழையால் சாலையில் வேரோடு மரம் சாய்ந்தது. வெள்ளக்குட்டை, நிம்மியம்பட்டு ஆலங்காயம், காவலூர், நாயக்கனூர், பீமகுளம் ஆகிய பகுதிகளிலும் சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

வாணியம்பாடி, ஜமுனாமரத்தூர் செல்லும் சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் விழுந்த மரங்களை அப்பகுதி மக்களே வெட்டி அப்புறப்படுத்தி சாலையை சீர் செய்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் 5 மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மேலும், அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் இருளில் மூழ்கியது.

ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி வீரான் வட்டத்தில் பெய்த பலத்த மழையால் சீகை என்ற 150 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பெரிய மரம் வேருடன் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அவ்வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மாற்று வழியில் சுற்றிச் சென்றனர்.

ஆற்காடு பகுதியில் பெய்த பலத்த மழையால் வளையாத்தூர் மதுரா, பல்லவராயன் குளம் பகுதியில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான காளை மாடு ஒன்றும், ஏழுமலை என்பவருக்கு சொந்தமான காளை மாடு ஒன்றும் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக இறந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்திலும், ஆரணி, போளூர், வந்தவாசி, செங்கம் பகுதிகளில் கனமழை பெய்தது. செங்கம் அருகே உள்ள கரிமலைப்பாடியை சேர்ந்தவர் கோமதி (13). இவர் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது வீட்டின் பக்கத்தில் ஓட்டு வீடு ஒன்று உள்ளது. அப்பகுதியில் பெய்த மழையினால் ஓட்டு வீட்டின் சுவர் ஈரப்பதமாக இருந்தது. கோமதி வீட்டில் இருந்து வெளியே வந்த போது ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து கோமதியின் மீது விழுந்தது.

இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோமதி பரிதாபமாக இறந்தார்.

செங்கம் அடுத்த ஆலப்புத்தூரை சேர்ந்தவர் தணிகாசலம். இவரது மகன் தனசு (வயது 15), அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். அங்கு பெய்த கன மழை காரணமாக தனசு வீட்டின் அருகே இருந்த மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தது.

வீட்டின் அருகே முறிந்து கிடந்த மரக்கிளையை அகற்றும் பணியில் தனசு ஈடுபட்டான். அப்போது அறுந்துகிடந்த மின்கம்பியை தனசு மிதித்துள்ளான். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவனை மீட்டு சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தனசுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் இறந்துவிட்டதாக கூறினர்.

வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

வேலூர்- 0.7

ஆம்பூர் - 7.2

வாணியம்பாடி- 9.0

ஆலங்காயம்- 34.8

அரக்கோணம்- 25.6

காவேரிப்பாக்கம்- 9.2

சோளிங்கர்- 15.6

ஆற்காடு- 21.4

மேல்ஆலத்தூர் - 34.5 .

Tags:    

Similar News