செய்திகள்

துப்பாக்கி சூடு சம்பவம் - சிப்காட் போலீஸ் நிலையத்தில் மேலும் 2 வழக்குகள் பதிவு

Published On 2018-06-09 08:02 GMT   |   Update On 2018-06-09 08:02 GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், வன்முறை தொடர்பாக சிப்காட் போலீஸ் நிலையத்தில் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதை யொட்டி நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நின்ற அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன.

போலீஸ் வாகனமும் தீவைத்து எரிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பில் நின்ற வாகனங்களும் சேதப்ப‌டுத்தப்பட்டன. இந்த சம்பவங்கள் தொடர்பாக ஏற்கனவே தூத்துக்குடி மேற்கு, தென்பாகம், சிப்காட் போலீஸ் நிலையங்களில் மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து இந்த 5 வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து ஒவ்வொரு வழக்குகளையும் தனித்தனி டி.எஸ்.பி.க்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம், வன்முறை தொடர்பாக சிப்காட் போலீஸ் நிலையத்தில் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. வன்முறையின்போது ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த அஜய்(38), பிரதீப் ஆகியோரது கார்களும் தீவைத்து எரிக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக அஜய், பிரதீப் ஆகிய இருவரும் சிப்காட் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் தனித்தனியாக இரு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

Tags:    

Similar News