செய்திகள் (Tamil News)

ஒகேனக்கல்லில் 2-வது நாளாக பரிசல் இயக்க தடை

Published On 2018-06-18 09:55 GMT   |   Update On 2018-06-18 09:55 GMT
ஒகேனக்கல்லில் இன்று 2-வது நாளாக பரிசல் இயக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனால் பரிசல் ஓட்டிகள் பரிசல்களை இயக்காமல் அவற்றை கவிழ்த்து வைத்து இருந்தனர்.
ஒகேனக்கல்:

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் மழை பெய்ததால் கபினி அணையில் இருந்து முதலில் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு 35 ஆயிரம் கன அடி வரை நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தற்போது மழை குறைந்து விட்டதால் கபினி அணையில் இருந்து வெறும் 500 கன அடி மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

3 நாட்களுக்கு முன்பு கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று அதிகாலை 12.30 மணிக்கு தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது. பின்னர் அந்த தண்ணீர் நேற்று அதிகாலை 3 மணிக்கு ஒகேனக்கல் வந்தது. அந்த தண்ணீர் நேற்று பிற்பகலில் மேட்டூர் அணையை அடைந்தது.

பிலிகுண்டுலுவில் தண்ணீர் அளவை மத்திய நீர்பாசன அதிகாரிகள் தொடர்ந்து கணக்கெடுத்து வருகிறார்கள். நேற்று காலை முதல் இரவு வரை 28 ஆயிரம் கன அடி முதல் 32 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வந்தது. இதனால் ஒகேனக்கல் ஐவர்பாணி அருவி, மெயின் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. இன்று நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக குறைந்தது. தொடர்ந்து இன்று 2-வது நாளாகவும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று காலை போலீசார் யாரும் இல்லாததால் நடைபாதை வழியாக மெயின் அருவிக்கு சென்று சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்தனர். இன்று 2-வது நாளாக பரிசல் இயக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனால் பரிசல் ஓட்டிகள் பரிசல்களை இயக்காமல் அவற்றை கவிழ்த்து வைத்து இருந்தனர். இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டமும் மிக குறைவாக காணப்பட்டது.

Tags:    

Similar News