செய்திகள் (Tamil News)

பாளையில் தண்ணீரில் நீந்தியபடி யோகாசனம் செய்து அசத்திய சிறுமி

Published On 2018-06-21 07:53 GMT   |   Update On 2018-06-21 07:53 GMT
உலக யோகா தினத்தை முன்னிட்டு பாளை அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல்குளத்தில் தண்ணீரில் நீந்தியபடி சிறுமி பிரிஷா 8 ஆசனங்களை செய்து அசத்தினார்.
நெல்லை:

பாளை வண்ணார்பேட்டையை சேர்ந்த கார்த்திக்கேயன்-தேவிபிரியா தம்பதியரின் மகள் பிரிஷா(வயது8). இவள் நெல்லையில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். சிறுமி பிரிஷா ஒரு வயதில் இருந்தே யோகா கற்று வந்தார். 5 வயதில் இருந்து மாநில, தேசிய, மாவட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்களை வென்றுள்ள பிரிஷா சவால் நிறைந்த கண்டபேருண்டாசனத்தை விரைவாக செய்து உலக சாதனை புரிந்தார். இதேபோல லோகண்ட் ஸ்கார்பியன் போஸ் யோகாசனத்தை 3.02 நிமிடத்தில் செய்தும், ராஜபோகட்டாசனத்தை 5.13 நிமிடங்களில் செய்தும் உலக சாதனை படைத்தார்.

மலேசியாவில் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட சர்வதேச யோகாசன போட்டியில் தங்கம் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். யோகாவில் பல்வேறு சாதனை புரிந்தமைக்காக அவருக்கு பல்வேறு பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சிறுமி பிரிஷா உலக யோகா தினத்தை முன்னிட்டு பாளை அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல்குளத்தில் தண்ணீரில் யோகாசனம் செய்து அசத்தினார். தண்ணீரிலேயே நீந்தியபடி அவர் வாமதேவ ஆசனம், ஏக பாத வாமதேவ ஆசனம், பத்மாசனம், குப்த பத்மாசனம், சுப்த பத்மாசனம் உள்ளிட்ட 8 ஆசனங்களை செய்து அசத்தினார்.

Tags:    

Similar News