செய்திகள்

பண்ருட்டியில் தொழில் அதிபர் காரில் கடத்தல்

Published On 2018-06-24 10:54 GMT   |   Update On 2018-06-24 10:54 GMT
பண்ருட்டியில் தொழில் அதிபர் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் விஜயரங்கன் (வயது 46). பிரபல தொழில் அதிபர். காங்கிரஸ் பிரமுகர் ஆவார். இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். விஜயரங்கன் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

மேலும் அவர் பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வருகிறார்.

நேற்று இரவு 9 மணிக்கு கடையை பூட்டி விட்டு விஜயரங்கன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். காமராஜர் நகரில் வடகைலாசம் கூட்டுறவு சங்கம் அருகே சென்ற போது பின்னால் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் திடீரென்று விஜயரங்கனின் மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் நிலைதடுமாறி விஜயரங்கன் கீழே விழுந்தார்.

அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. அதில் இருந்து 6 பேர் கீழே இறங்கினர். சாலையில் விழுந்து கிடந்த விஜயரங்கனை சரமாரியாக தாக்கி குண்டுக்கட்டாக தூக்கி காரில் கடத்தி சென்றனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களில் ஒருவர் விஜயரங்கனின் மோட்டார் சைக்கிளையும் எடுத்து சென்று விட்டார்.

தொழில் அதிபர் விஜயரங்கன் கடத்தப்பட்ட சம்பவம் அவரது அண்ணன் விஜயராகவனுக்கு தெரியவந்தது. உடனே அவர் இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார்.

தொழில் அதிபர் கடத்தப்பட்ட தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் விஜயரங்கனின் வீட்டுக்கு சென்று அவரது மனைவியிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

விஜயரங்கன் அந்த பகுதியில் பலருக்கு வட்டிக்கு பணம் அதிகளவு கொடுத்துள்ளார். தொழில் போட்டி காரணமாகவோ அல்லது அவரிடம் இருந்த பணத்தை பறிக்கவோ அவரை மர்ம மனிதர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மேலும் அவரை கடத்தியது கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். விடிய விடிய போலீசார் வாகன சோதனை மேற் கொண்டனர்.

மேலும் சந்தேகப்படும் படியான வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். தொழில் அதிபர் விஜயரங்கன் நேற்று காலை முதல் யாரிடமெல்லாம் செல்போனில் பேசியுள்ளார் என்ற தகவல்களையும் போலீசார் சேகரித்தனர். செல்போன் டவர் மூலம் ஆய்வு மேற் கொண்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

தொழில் அதிபரை கடத்தி சென்றவர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் 3 தனிப்படை அமைத்துள்ளார். இதில் புதுப்பேட்டை இன்ஸ் பெக்டர் முருகேசன், காடாம் புலியூர் இன்ஸ்பெக்டர் குமரய்யா, நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந் திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தொழில் அதிபரை கடத்தி சென்றவர்கள் புதுவையில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் இன்று அதி காலை புதுவைக்கு சென்று அங்குள்ள லாட்ஜூகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பண்ருட்டியில் தொழில் அதிபர் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News