செய்திகள் (Tamil News)

வீராணம் ஏரிக்கு இன்று இரவு காவிரிநீர் வருமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு

Published On 2018-07-24 10:18 GMT   |   Update On 2018-07-24 10:18 GMT
மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் வீராணம் ஏரிக்கு இன்று இரவு வருமா? என்று விவசாயிகள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசனவசதி பெறுகிறது. ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வரத்தொடங்கியது. தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவ மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.

தொடர்ந்து மழை இல்லாததாலும், ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததாலும் நீர்மட்டம் படிபடியாக குறைந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்து ஏரி வறண்டு காணப்பட்டது. இதனால் விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் கர்நாடகத்தில் பெய்துவரும் தொடர் மழையினால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அது கல்லணையை வந்தடைந்தது. அங்கிருந்து அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள அணைக்கரை பகுதிக்கு காவிரிநீர் வந்து சேர்கிறது.

இதையடுத்து கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள கீழணைக்கு இன்று மாலை காவிரிநீர் வந்து சேரும். அங்கிருந்து இன்று இரவு அல்லது நாளை வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீராணம் ஏரிக்கு தண்ணீர் எப்போது வரும் என்றும் விவசாயிகள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர்.

வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தவுடன் அங்கிருந்து சென்னை குடிநீருக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News