செய்திகள்

ஒகேனக்கலுக்கு இன்று நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்வு

Published On 2018-08-16 04:26 GMT   |   Update On 2018-08-16 04:26 GMT
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று காலை 7 மணி நிலவரப்படி 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. #Hogenakkal #Cauvery
ஒகேனக்கல்:

கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.

மழையினால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), ஹேரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் நிரம்பி விட்டன. ஏற்கனவே கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தொடர்ந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஹேமாவதி, ஹேரங்கி அணைகளில் இருந்து கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து உபரிநீர் அதிக அளவில் திறக்கப்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து 2½ லட்சம் கன அடி தண்ணீர் வரை திறக்கப்பட்டது. இன்று காலை 6 மணி நிலவரப்படி கபினி அணையில் இருந்து 55 ஆயிரம் கன அடி வீதமும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சத்து 19 ஆயிரத்து 988 கன அடி வீதமும், தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நீர் தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை அடைகிறது.

ஒகேனக்கலுக்கு நேற்று காலை 9 மணிக்கு நீர்வரத்து 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடியாக இருந்தது. நேற்று பிற்பகல் 3 மணிக்கு நீர்வரத்து 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடியாகவும், மாலை 5 மணிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்தது.

இன்று காலை 7 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் சத்திரம் பகுதியில் இருந்த 10 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதேபோல ஊட்டமலையில் இருந்து ஒகேனக்கல் வரை காவிரி கரையோர பகுதியில் வசித்த மக்கள் ஒகேனக்கல்லில் உள்ள பெரியால் பில்டிங்கில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று மாலை முதல் தங்கி உள்ள 55 பேருக்கு வருவாய் துறை சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து இருப்பதால் ஒகேனக்கல் ஐந்தருவி இருப்பதே தெரியாத அளவிற்கு தண்ணீர் செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. மெயின் அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதைக்காண இன்றும் சுற்றுலா பயணிகள் கார், வேன், பஸ்களில் ஒகேனக்கலுக்கு வந்தனர். அவர்களை வனத்துறையினர் மற்றும் போலீசார் மடம் சோதனைச்சாவடி மற்றும் கண்ணாடி குண்டு ஆகிய பகுதிகளில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினார்கள்.

ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளில் தீயணைப்புத்துறையினர், ஊர்காவல் படையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தொடர்ந்து முகாமிட்டு உள்ளனர்.

5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்து உள்ளது. 2005-ம் ஆண்டு வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. 2013-ம் அண்டு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடியாக இருந்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் (2018ல்) 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.

கடந்த 1961-ம் ஆண்டு ஒகேனக்கலுக்கு 3 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது தான் அதிகபட்ச அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. #Hogenakkal #Cauvery

Tags:    

Similar News