செய்திகள் (Tamil News)

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: திருநாவுக்கரசர்

Published On 2018-08-29 08:15 GMT   |   Update On 2018-08-29 10:48 GMT
ஏழை, எளிய மக்களை பாதிக்கக்கூடிய பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். #Congress #Thirunavukkarasar #Petrol #Diesel
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்த போது அதற்கு இணையாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் கலால் வரியை உயர்த்தி, அரசு கஜானாவை நிரப்புவதில் தான் அக்கறை காட்டப்பட்டது.

தற்போது ஒரு லிட்டர் டீசல் விலை சிறுக சிறுக உயர்த்தப்பட்டு ரூபாய் 73.69 ஆகவும், பெட்ரோல் விலை ரூ.81.22 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இத்தகைய விலை உயர்வு சாதாரண ஏழை-எளிய மக்களை கடுமையாக பாதிக்கக் கூடியதாகும்.

பா.ஜ.க. ஆட்சியில் கலால் வரி ஒரு லிட்டர் டீசலுக்கு ரூபாய் 13.47 ஆகவும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.11.77 ஆகவும், நவம்பர் 2014 முதல் ஜனவரி 2016 வரை உயர்த்தப்பட்டு கிட்டத்தட்ட ரூபாய் 10 லட்சம் கோடி பா.ஜ.க. அரசு வருமானத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறது.

இத்தகைய வரிவிதிப்பின் காரணமாகவே பெரும் சுமையை மக்கள் ஏற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இதை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டும். இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையை உடனடியாக பா.ஜ.க. அரசு நிறுத்தவில்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Congress #Thirunavukkarasar #Petrol #Diesel
Tags:    

Similar News