செய்திகள் (Tamil News)

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் அனுமதி

Published On 2018-10-20 05:58 GMT   |   Update On 2018-10-20 05:58 GMT
கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கோவை:

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கரூரை சேர்ந்த 69 வயது முதியவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

திடீரென முதியவரின் உடல் நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து அவரை அவரது உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அப்போது முதியவரின் ரத்த மாதிரியை டாக்டர்கள் சோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதே போல ஈரோட்டை சேர்ந்த 6 வயது சிறுமி காய்ச்சல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிறுமியை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமியின் ரத்த மாதிரியை டாக்டர்கள் சோதனை செய்து போது சிறுமிக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமியை சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கனவே டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும் , வைரஸ் காய்ச்சலுக்கு 10 பேரும் என மொத்தம் 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News