செய்திகள் (Tamil News)

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு விவசாயி பலி

Published On 2018-10-26 07:21 GMT   |   Update On 2018-10-26 07:21 GMT
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற விவசாயி பலியானார். 115 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #SwineFlu

மதுரை:

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிகாய்ச்சல் பாதிப்பால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுரை மாவட்டம், அழகர்கோவில் அருகில் உள்ள அழகாபுரியைச் சேர்ந்தவர் சாமிராஜ் (வயது 52), விவசாயி. கடந்த வாரம் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்தபோது சாமிராஜூக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தது கண்டறியப்பட்டது.

அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக 24 மணி நேரமும் செயல்படும் தனி பிரிவில் சாமிராஜ்அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

நேற்று மதியம் சாமிராஜின் உடல்நிலை மோசமடைந்தது. பிராண வாயு பொருத்திய நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் நள்ளிரவில் அவர் பரிதாபமாக இறந்தார்.

பின்னர் சாமிராஜின் உடலை உறவினர்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். இதன் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்காக இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 15 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதே போன்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100 பேரும் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். #SwineFlu

Tags:    

Similar News