செய்திகள்

கொடைக்கானல் மலையில் கஜா புயல் தாண்டவம் - 15 ஆயிரம் ஏக்கர் காபி- மிளகு செடிகள் நாசம்

Published On 2018-11-24 07:41 GMT   |   Update On 2018-11-24 07:41 GMT
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் கஜா புயல் தாக்குதலால் 15 ஆயிரம் ஏக்கர் காபி, மிளகு, ஆரஞ்சு உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளது. #Gajastorm

பெரும்பாறை:

இயற்கை அழகை தன்னகத்தே கொண்ட கொடைக்கானலை ரசிக்க வருடம் தோறும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதற்கு காரணம் இங்கு மலைகளும், அருவிகளும், நீர் வீழ்ச்சிகளும், மலர் கூடங்களும், விவசாய நிலப்பரப்பும் காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

ஆனால் இயற்கையே புயலாக மாறி இயற்கையை சூறையாடியது போல கஜா புயல் கடந்த 16-ந் தேதி கொடைக்கானலை கபளீகரம் செய்தது. புயல் தாக்கும் என சற்றும் எதிர்பார்க்காத கொடைக்கானலில் சுழன்று அடித்த சூறைக்காற்று பல ஆயிரம் ஏக்கர் பயிர்களை சேதப்படுத்தியது.

இதனால் அதன் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கொடைக்கானல் கீழ் மலை பகுதியான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மஞ்சள் பரப்பு பெரும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் காபி, மிளகு, சில்வர் ஓக், ஆரஞ்சு, அவக்கோடா உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இதில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காபி மற்றும் மிளகு செடிகள் தரைமட்டம் ஆகின. மிளகு கொடியை சில்வர் ஓக், சவுக்கு மரங்களில் படர விட்டு உயரமான ஏணியில் ஏறி விவசாயிகள் அறுவடை செய்வார்கள்.

மிளகு கொடி மூலம் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை மகசூல் கிடைக்கும். ஒரே தோட்டத்தில் 10 முதல் 500 வரை மரங்கள் விழுந்ததால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. மிளகு பயிரிட்ட விவசாயிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப 12 ஆண்டுகள் ஆகும் என கண்ணீருடன் தெரிவித்தனர்.

ஏனெனில் முதலில் மரத்தை நட்டு அந்த மரம் வளர்ச்சியடைய 7 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு அந்த மரத்தின் மீது மிளகு கொடியை படர விட்டு அறுவடை செய்ய 5 ஆண்டுகள் ஆகும். இதே போல்தான் காபி செடிகளும் கஜா புயலால் வேரோடு சாய்ந்து விழுந்தது.கே.சி.பட்டி, பெரியூர், கவியக்காடு, தடியன்குடிசை, பாச்சலூர், ஆடலூர், பன்றிமலை பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் புயலின் தாக்கம் விவசாயிகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொடைக்கானல் மலை கிராமங்களில் பயிரிடப்படும் மற்றொரு முக்கியமான விவசாயம் ஆரஞ்சு மற்றும் அவக்கோடா பழங்கள் ஆகும். பணப்பயிர்களாக உள்ள இவை வருடம் தோறும் விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தந்தது. குறிப்பாக அவக்கோடா பழங்கள் ஆப்பிள் பழத்தை விட விலை அதிகமாகும். தற்போதைய நிலவரப்படி 1 கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனையாகி வந்தது.

இந்த பழங்கள் இங்கிருந்து பறிக்கப்பட்டு தரமாக பேக்கிங் செய்து சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். தற்போது அவக்கோடா மற்றும் ஆரஞ்சு செடிகளில் மழை நீர்தேங்கி பெருமளவு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவை தவிர பீன்ஸ், வெள்ளரி, தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர்களும் பயிரிடப்படுள்ளன. இவை அனைத்தும் புயலால் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ளது. அதிகாரிகள் இன்னும் பார்வையிட்டு நிவாரண உதவி குறித்த அறிவிப்பை தெரிவிக்க வில்லை. காபி மிளகு, ஆரஞ்சு போன்ற நிரந்தர பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.18 ஆயிரமும், நீர் பாய்ச்சும் காய்கறிகளுக்கு ரூ.12 ஆயிரமும், மானாவாரி காய்கறிகளுக்கு ரூ.7410-ம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிவாரணம் போதாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கொடைக்கானலில் மொத்த பாதிப்பு ரூ.150 கோடிக்கு மேல் இருக்கும் என்று அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். ஆனால் ரூ.10 கோடிக்கும் குறைவாகவே நிவாரணம் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் எதிர்பார்க்கும் முழு நிவாரணம் கிடைக்குமா? என சந்தேகம் எழுந்துள்ளது. #Gajastorm

Tags:    

Similar News