செய்திகள்

நிவாரணம் கேட்டு போராடியவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்- திருநாவுக்கரசர் பேட்டி

Published On 2018-11-24 23:05 GMT   |   Update On 2018-11-24 23:05 GMT
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் கேட்டு போராடியவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார். #thirunavukkarasar #gajacyclone #gajarelief
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 3 நாள் பார்வையிட உள்ளேன். சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. 8-ந் தேதி நடைபெற உள்ள காங்கிரஸ் அறக்கட்டளை கூட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையில் நிவாரணம் வழங்குவது என முடிவு செய்து அறிவிக்கப்படும்.

ஒரு வாரம் கழித்து மத்திய குழு வந்துள்ளது. இந்த குழு ஆய்வு செய்து அறிக்கை தந்தபிறகு தான் நிதி தரவேண்டும். பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் பார்த்து இருக்கலாம். அல்லது உள்துறை மந்திரி, ஏதாவது ஒரு மத்திய மந்திரியாவது வந்து பார்த்து இருக்கலாம். யாரும் வராதது மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிப்பதையே காட்டுகிறது.

தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ.5 ஆயிரம் கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும். பல இடங்களில் மின் இணைப்பு சீராகவில்லை, உணவு பொருட்கள் போய்ச்சேரவில்லை. நிவாரண தொகையை உயர்த்தித்தர வேண்டும். தமிழக அரசு ஒதுக்கிய தொகை போதுமானதல்ல. இதனால் மத்திய அரசு நிதியை ஒதுக்க வேண்டும். மத்திய அரசு முன்கூட்டியே முதற்கட்ட நிதியை ஒதுக்க வேண்டும்.

நிவாரணம் கேட்டு போராடியவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் போராடுபவர்கள் அரசு சொத்துகளை சேதப்படுத்தக் கூடாது. போராடுபவர்களை வழக்கு போட்டு சிறையில் அடைப்பது சரியல்ல.

புயலுக்கு முன்னால் நடவடிக்கை சரியாக இருந்தது. புயலுக்கு பின் நடவடிக்கைகள் சரியில்லை. அமைச்சர்கள் மாவட்டங்களில் தங்கியிருந்து பணியாற்றினாலும் உரிய நிவாரண பொருட்கள் வழங்கப்படவில்லை. பணிகள் முழுவீச்சில் நடக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #gajacyclone #gajarelief 
Tags:    

Similar News