செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் இன்னும் கிடைக்கவில்லை- திருநாவுக்கரசர்

Published On 2018-11-27 09:29 GMT   |   Update On 2018-11-27 09:29 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் அரசின் நிவாரணத்தொகை கிடைக்கவில்லை என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார். #GajaCyclone #Congress #Thirunavukkarasar
முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயல் பாதிப்புகேற்ப நிவாரணத்தொகை கூடுதலாக பெற, மாநில அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் டெல்டா மாவட்டங்களில் பேரிடர் ஏற்பட்டுள்ளதாக மத்திய குழுவினரே அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை பிரதமரோ, மத்திய அமைச்சர்களோ நேரில் வந்து பார்த்திருக்கலாம். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

தமிழக முதல்வர் அனைத்து கட்சியினரை கலந்தாலோசித்து மத்திய அரசிடம் கூடுதல் நிவாரணம் பெற ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனாலும் அதற்கு அவகாசமில்லை.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் அரசின் நிவாரணத்தொகை கிட்டவில்லை.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் நிவாரணத் தொகைகள் மறுநாளே வழங்கப்பட்டன. தற்போதைய ஆட்சியில், புயலடித்து 10 நாட்களாகியும் எதுவும் நடக்கவில்லை.

அரசு இயந்திரம் குக்கிராமங்களை இன்னமும் எட்டிப் பார்க்காமல் உள்ளது. கடலோர மீனவர்கள் படகுகள் மற்றும் வலைகளை இழந்துள்ளனர். மீனவர் கிராமங்கள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன.

கஜா நிவாரணம் வேண்டி போராட்டம் நடத்தி யாராவது கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.

காங்கிரஸ் தரப்பில் வரும் 8-ம் தேதி நடைபெறும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கஜா புயலுக்கான நிதி அறிவிப்பு வெளியிடப்படும்.

காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்படும் நிதி முதல்வரிடமோ அல்லது மக்களுக்கு நேரடியாகவோ வழங்கப்படும்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார். #GajaCyclone #Congress #Thirunavukkarasar
Tags:    

Similar News