செய்திகள்
போலி மது குடித்து உயிரிழந்த முருகன் மற்றும் சாய்ராம்.

திண்டுக்கல் அருகே போலி மது குடித்த 2 தொழிலாளர்கள் பலி

Published On 2018-12-05 04:01 GMT   |   Update On 2018-12-05 06:48 GMT
திண்டுக்கல் அருகே போலி மது குடித்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தையடுத்து மதுபானங்களை விற்பனை செய்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #LiquorDeaths
கொடைரோடு:

திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி அருகே உள்ள கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 48). சாண்டலார்புரத்தைச் சேர்ந்தவர் சாய்ராம் (60), பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்தவர் தங்கம் (50). கூலித் தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் இன்று காலை பள்ளப்பட்டி அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் மது வாங்கி குடித்தனர்.

பின்னர் தங்கள் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்த போது அடுத்தடுத்து 3 பேரும் மயங்கி விழுந்தனர். அப்பகுதி வழியே வந்தவர்கள் போதையில் கிடக்கலாம் என நினைத்து விட்டு சென்று விட்டனர்.

ஆனால் சிறிது நேரத்திலேயே அவர்கள் வாயில் நுரை தள்ளியது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது முருகன் அதே இடத்தில் இறந்து கிடந்தார். உயிருக்கு போராடிய மற்ற 2 பேர்களையும் ஆம்புலன்சில் ஏற்றி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வரும் வழியிலேயே சாய்ராம் உயிரிழந்தார். இதனையடுத்து தங்கம் என்பவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொழிலாளர்கள் வாங்கி குடித்த மது போலியானதாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். பெட்டிக்கடைகளில் பதுக்கி மது பானங்கள் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இது போன்ற கடைகளில் மது பானத்தில் கலப்படம் செய்தும், அதிக போதைக்காக மாத்திரைகளை கலந்து விற்பனை செய்யப்படுவதும் உண்டு. எனவே அது போன்ற மதுபானங்களை இவர்கள் வாங்கி குடித்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மது பானங்களை விற்பனை செய்தது யார்? அவர் எங்கிருந்து வாங்கி வந்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் அந்த கடையில் இருந்து வேறு யாரேனும் மது பானங்கள் வாங்கி குடித்து உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளனரா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி மது குடித்து அடுத்தடுத்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.  #LiquorDeaths

Tags:    

Similar News