செய்திகள்

19ந் தேதி குமரி வருகிறார் பிரதமர் மோடி - ரூ.40 ஆயிரம் கோடி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்

Published On 2019-01-29 05:06 GMT   |   Update On 2019-01-29 05:06 GMT
குமரி மாவட்டத்திற்கு 19-ந்தேதி வருகை தரும் பிரதமர் மோடி ரூ.40 ஆயிரம் கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். #PMModi
கன்னியாகுமரி:

பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து பா.ஜனதா கட்சியை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முக்கிய நகரங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

அதன்படி அவர் தமிழகத்திலும் முகாமிட்டு பா.ஜனதா நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார். நேற்று முன்தினம் மதுரை வந்த மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதுடன், பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசினார்.

அடுத்தக்கட்டமாக அவர் வருகிற 10-ந் தேதி திருப்பூருக்கு செல்கிறார். பின்னர் 19-ந் தேதி மீண்டும் தமிழகம் வரும் அவர் கன்னியாகுமரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி மற்றும் பா.ஜனதா கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளார்.

இந்த தகவலை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் அவர் கன்னியாகுமரியில் மோடி பேச உள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி இறைவனால் நமது நாட்டுக்கு மட்டுமல்ல என்னை பொருத்தவரை தமிழகத்திற்கும் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய கொடையாகும். அவர் தமிழ்நாட்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி நலத்திட்டங்களை வழங்கி உள்ளார்.

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பேச உள்ள இடத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு டெல்லியில் இருப்பது போன்ற பிரமாண்டமான எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி உள்ளார். அதேபோல தஞ்சை, நெல்லை, போன்ற இடங்களில் பல்நோக்கு மருத்துவமனையை அவர் திறந்து வைத்தார். இந்த மருத்துவமனைகளுக்கு தலா ரூ.150 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

அடுத்த மாதம் தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி 2 முறை வருகை தர உள்ளார். திருப்பூருக்கு பிப்ரவரி 10-ந்தேதியும், குமரி மாவட்டத்திற்கு 19-ந்தேதியும் வருகை தருகிறார்.

குமரி மாவட்டத்தில் ரூ.40 ஆயிரம் கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள் நடந்து உள்ளது. இந்த திட்டங்களை திறந்து வைத்தும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பிரதமர் பேசுகிறார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அமைக்கப்பட்டு உள்ள தங்க நாற்கரசாலை கன்னியாகுமரி சீரோ பாய்ண்டில் முடிவடைகிறது. அந்த இடத்தில் பிரதமர் கலந்து கொள்ளும் விழாவை நடத்தலாமா? அல்லது தங்க நாற்கர சாலையில் முருகன் குன்றம் அருகே உள்ள மைதானத்தில் நடத்தலாமா? என்று ஆலோசனை நடத்தப்பட்டது. குறைந்தபட்சம் 1½ லட்சம் பேர் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

2004-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந்தேதி மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கன்னியாகுமரி-காஷ்மீர் தங்க நாற்கர சாலைக்கு அடிக்கல் நாட்டினார். அந்த பகுதியில் நரிக்குளம் பாலம் காரணமாக 4 வழிச்சாலை பணி முடியாமல் இருந்தது. தற்போது பாலப்பணி முடிந்துள்ளது. நரிக்குளம் பாலத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார். வாஜ்பாய் தொடங்கி வைத்ததை பிரதமர் மோடி முடித்து வைக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.   #PMModi
Tags:    

Similar News