செய்திகள் (Tamil News)
குன்னூரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் பிரசாரம் செய்த காட்சி.

கொடநாடு பிரச்சனையில் எனக்கு தொடர்பு இருப்பதாக ஸ்டாலின் கூறுவது பச்சை பொய்- எடப்பாடி பழனிசாமி

Published On 2019-04-08 10:26 GMT   |   Update On 2019-04-08 10:26 GMT
கொடநாடு பிரச்சனையில் எனக்கு தொடர்பு இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறுவது பச்சை பொய் என்று தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். #Loksabhaelections2019 #edappadipalaniswami
குன்னூர்:

நீலகிரி தொகுதி அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குன்னூரில் வேனில் இருந்தவாறு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவின் நிரந்தர பிரதமராக மோடி வர வேண்டும். எதிர்கட்சியாக இருக்கும் போதே தி.மு.க. அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.

அம்மா ஆட்சி தான் உங்களுக்கு பாதுகாப்பாக அமைந்துள்ளது. பெண்களுக்கு மிகவும் முக்கியமாக பாதுகாப்பு அளிக்கும் ஆட்சியாக உள்ளது.

இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக ஆ. ராசா நிறுத்தப்பட்டு உள்ளார். அவர் 2ஜி வழக்கில் சிறை சென்றவர். கடந்த 2009-ம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்ட போது அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. வழக்கு சம்பந்தமாக அவர் கோர்ட்டுக்கு செல்லவே நேரம் சரியாக இருந்தது. அவர் ஊழல் பெருச்சாளி. அவர் பற்றி உங்களுக்கெல்லாம் தெரியும். அவர் மீது இன்னும் வழக்கு உள்ளது. அவர் மீண்டும் சிறைக்கு செல்வார். அவருக்கு ஏன் ஓட்டுப் போடுகிறீர்கள். அவர் இங்கு நின்று என்ன செய்ய போகிறார். மக்களை காக்கும் ஒரே அரசு அம்மாவின் அரசு.

தி.மு.க. தேர்தல் அறிக்கை பொய்யானது. கருணாநிதி இருக்கும் வரை மு.க. ஸ்டாலின் செயல் தலைவராகதான் இருந்தார். அவரால் தலைவராக முடியவில்லை. கருணாநிதி உயிர் பிரிந்த பிறகுதான் மு.க. ஸ்டாலின் தலைவராகி உள்ளார்.

2ஆண்டு காலமாக கருணாநிதியை வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே சிறைவைத்து விட்டு அதன் பின் தி.மு.க. தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்.

கொடநாடு கொலையாளிகளுக்கு உதவி செய்தவர் மு.க. ஸ்டாலின். சிறைக்கு சென்று வந்த கொலையாளிகளுக்கு உதவியவர் மு.க. ஸ்டாலின். அவர் எங்களை பார்த்து தவறாக சொல்லி வருகிறார். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை.

கொடநாடு பிரச்சனையில் எனக்கு தொடர்பு இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறுவது பச்சை பொய்.

குன்னூர் மக்களின் தேவைக்காக 3-ம் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு மக்கள் தேவை பூர்த்தி செய்யப்பட்டு உள்ளது. குன்னூர் டேன்டீ தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டு உள்ளது.

குன்னூர் முக்கிய சுற்றுலா பகுதியாக விளங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

அம்மா உயிருடன் இருந்த போது நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பிரச்சனைகளையும் உன்னிப்பாக கவனித்து தன்னுடைய சொந்த தொகுதி போல் கருதி பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்களை அழைத்து அனைத்து திட்டங்களையும் செய்து முடிக்க உத்தரவிட்டார். தற்போது அதே போன்று சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து நீலகிரி மக்கள் பிரச்சனைகளை தீர்க்க நானும் ஆணையிட்டு உள்ளேன்.

குன்னூர் பஸ்நிலையம் பகுதியில் லெவல் கிராஸ் மேம்பாலம் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. செக்‌ஷன் 17-ல் வசிக்கும் மக்களை வெளியேற்றுவதாக தவறான பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

இதனை நம்ப வேண்டாம். அவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. டான்டீ தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. வேட்பாளர் இந்த பகுதியை சேர்ந்தவர். அவரிடம் குறைகளை எப்போது வேண்டுமானாலும் கூறலாம். இதற்காக அவர் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். #Loksabhaelections2019 #edappadipalaniswami
Tags:    

Similar News