செய்திகள்

அரசை கவிழ்க்க நினைப்பவர்களுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

Published On 2019-05-12 06:51 GMT   |   Update On 2019-05-12 06:51 GMT
அரசை கவிழ்க்க நினைப்பவர்களுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முனியாண்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து 2-வது கட்டமாக திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு ஆளுங் கட்சி வேட்பாளராக போட்டியிடும் முனியாண்டி வெற்றி பெற்றால் தொகுதி மக்களின் பிரச்சினைகள் தீரும். எதிர்க்கட்சி வெற்றி பெற்றால் எந்த பலனும் கிடைக்காது.

இந்த இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் நிறைய வாக்குறுதிகளை தருகிறார். எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அவரால் எப்படி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.


 

22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று நன்மை செய்வேன் என்று ஸ்டாலின் கூறுகிறார். நான் சொல்கிறேன் ஏற்கனவே நடந்து முடிந்த 18 சட்டசபை தொகுதிகளிலும் நடைபெற உள்ள 4 சட்ட சபை தொகுதிகளிலும் அ.தி.மு.க.அமோக வெற்றி பெறும். தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும்.

கருணாநிதி நாட்டு மக்களுக்காக வாழ்ந்ததாக வரலாறு கிடையாது. தி.மு.க. கட்சி அல்ல. அது ஒரு கம்பெனி.

தனது தந்தைக்கு மெரினா கடற்கரையில் 6 அடி நிலம் கூட தரவில்லை என ஸ்டாலின் மக்களிடம் அனுதாபம் மற்றும் இரக்கத்தை பெறுவதாக நினைத்து பேசி வருகிறார்.

நீதிமன்ற வழக்கு காரணமாகவே மெரினாவில் கருணாநிதியின் சமாதிக்கு இடம் ஒதுக்கவில்லை. ஆனால் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் எதிரே காந்தி மண்டபம் அருகே ரூ.300 கோடி மதிப்பிலான இடத்தை கொடுத்தோம். அதனை ஏற்க மறுத்து விட்டனர்.

காமராஜர் இறந்தபோது மெரினாவில் இடம் தர மறுத்தவர் கருணாநிதி. அதேபோல் ஜானகி அம்மாள் இறந்த போதும் இடம் தர மறுத்தார். அவர்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?

ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சியை இடைத்தேர்தல் மூலம் கவிழ்ப்பேன் என்று டி.டி.வி. தினகரன் பேசி வருகிறார். இதன் மூலம் தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் உள்ள ரகசிய உறவு வெளி வந்துள்ளது.

சட்டசபையில் ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்பு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. என்ற முறையில் கூட தினகரன் கலந்து கொள்ளவில்லை. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர் தினகரன். அதனால் தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவரை நீக்கினார் ஜெயலலிதா. அ.தி.மு.க.வை உடைக்கவும், அரசை கவிழ்க்கவும் நினைப்பவர்களுக்கு இந்த தேர்தலில் பொதுமக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

மேற்கண்டவாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News