செய்திகள்

சட்டசபை இடைத்தேர்தலில் தினகரன் கட்சி திமுக வெற்றிக்காக போட்டியிடுகிறது - எடப்பாடி பழனிசாமி

Published On 2019-05-13 06:54 GMT   |   Update On 2019-05-13 07:01 GMT
சட்டசபை இடைத்தேர்தலில் தினகரன் கட்சி திமுக வெற்றிக்காக போட்டியிடுகிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை:

ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட வசவப்புரம், வல்ல நாடு ஆகிய இடங்களில் அ.திமு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வை தொடங்கினார். அந்த இயக்கத்திற்கு வழங்கப்பட்ட வெற்றிச் சின்னம் தான், இரட்டை இலை சின்னம். அந்த சின்னத்தை முடக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றம் வரை சென்று போராடியவர் தான் டி.டி.வி. தினகரன்.

இந்த ஆட்சியை கலைக்க வேண்டும். கட்சியை உடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. தற்போது தி.மு.க.வுடன் சேர்ந்து கொண்டு அம்மாவின் ஆட்சியை கலைக்க வேண்டும் என முயற்சி எடுத்து வருகிறார். அது ஒரு போதும் பலிக்காது.

டி.டி.வி.தினகரனை வாழ வைத்தது இந்த இயக்கம். அடையாளம் காட்டியது இந்த இயக்கம், விலாசம் கொடுத்ததும் இந்த இயக்கம், அவருக்கு அரசியல் முகவரி தந்து புரட்சித் தலைவி அம்மாவால் வாய்ப்பளிக்கப்பட்டு அ.தி.மு.க. சார்பாக போட்டியிட்டு, வெற்றி பெறச் செய்து, பாராளுமன்றத்தில் அமர வைத்ததும் இந்த இயக்கம் தான். ஆனால் இன்றைக்கு அந்த கட்சிக்கே துரோகம் இழைத்து வருகிறார்.

 


 

மறைமுகமாக தி.மு.க.வை வெற்றி பெற வைக்க வேண்டும். என்பதற்காக இவர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். எம்.ஜி.ஆர் கட்சியை உருவாக்கும் போது தி.மு.கவால் எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தார் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

அவரது மறைவுக்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா தலைமை பொறுப்பை ஏற்கும் போது தி.மு.கவால் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பதும் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். புரட்சித் தலைவி அம்மாக்கு தி.மு.க. பல்வேறு வகையில் இன்னல்களையும், இடர்பாடுகளையும் அளித்து வந்தது. அம்மா மீது பல்வேறு பொய் வழக்குகளை போட்டு, அம்மாவை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்படைய செய்ததின் காரணமாகவே, அவரது உடல்நிலை நலி வுற்று, இந்த மண்ணை விட்டு மறைந்தார்.

அம்மாவை யார், யார் எல்லாம் இந்த நிலைக்கு ஆளாக்கினார்களோ, பழி வாங்கினார்களோ அவர்களுடன் தினகரன் தற்போது கூட்டணி சேர்ந்து கொண்டு. இந்த ஆட்சியையும், கட்சியையும் அழிக்கப்பார்க்கிறார். அழிக்க நினைப்பவர்களுக்கு இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

நான் கிராமத்தில் விவசாய குடும்பத்திலே பிறந்தவன். விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்களை நன்கு உணர்ந்தவன். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலையொட்டி 26 நாட்கள் தொடர்ந்து கடும் வெயிலிலும் பிரசாரம் செய்து மக்களை சந்தித்து வந்துள்ளேன். அனுபவ ரீதியாக கிராம மக்களின் இன்னல்களையும், துன்பங்களையும் நான் நன்கு அறிந்தவன்.

ஆனால், ஸ்டாலின் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர். அவரால் வெயிலில் பிரசாரம் செய்ய முடியவில்லை. 4 நாட்கள் கூட வெயிலை தாங்க முடியாதவர் ஸ்டாலின். இவர் மக்களின் கஷ்ட, நஷ்டங்களை தெரியாதவர். இவர் எப்படி மக்களுக்கு சேவை செய்வார். இவர் பிரச்சரக் கூட்டத்தில் பேசும் போது, நான் சிவப்பாக இருக்கிறேன், கவர்ச்சியாக இருக்கிறேன். தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் தற்போது கறுத்துள்ளேன் என பேசியிருக்கிறார். ஒரு தலைவர் இது போன்ற கருத்தை மக்களிடத்திலே தெரிவிக்கலாமா என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இவர் பிரசாரத்திற்கு செல்லும் போது, பேண்ட், டிசர்ட் அணிந்து இருபது வயது இளைஞர் என்ற எண்ணத்துடன் சென்று கொண்டிருக்கிறார். எனவே, வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

புரட்சித்தலைவி அம்மா மக்களுக்காக செயல்படுத்திய அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் தற்போது முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மழைகாலங்களில் பெய்கின்ற மழைநீரை தடுத்திடும் வகையில் தடுப்பணைகள் கட்டும் திட்டமும் செயல் படுத்தப்படுகிறது.

அதே போன்று குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகள், குளங்கள் அனைத்தும் தூர்வாரப்படுகிறது. இது வரை 3000க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் அண்மையில் ஏற்றப்பட்ட சூறைக் காற்றால் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட வாழை மரங்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏழை, எளிய மக்களும் முறையான மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட முதல்- அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

தற்போது நான் தான் முதல்-அமைச்சராக இருக்கிறேன். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராகத்தான் இருக்கிறார். அவர் எப்படி தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்ற முடியும். பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வாக்குகளை பெற வேண்டும் என்பது தான் தி.மு.க.வின் திட்டமாகும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Tags:    

Similar News